இன்று டிசம்பர் 23 – இந்திய உழவர் தினம்…!
இன்று டிசம்பர் 23 – இந்திய உழவர் தினம். விவசாயக் குடும்பத்தில் பிறந்து, இந்தியாவின் பிரதமர் நாற்காலியை அலங்கரித்தவர் சவுத்திரி சரண்சிங். அவரது பிறந்த நாளே தேசிய உழவர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால், உழவர் பிரச்சினைகள் குறித்து இந்திய மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை.. இந்திய விவசாயிகளின் நிலை மோசமாக உள்ளது. விவசாயிகள் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. தேசிய மாதிரி சர்வேயில், 8 சதவிகித மக்கள் விவசாயத்தை விட்டு வெளியேறிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவாமிநாதன் கமிஷன் அறிக்கை, 40 சதவிகித மக்கள் விவசாயத்தை விட்டு வெளியேற இருப்பதாகச் சொல்கிறது.
விளை பொருள்களுக்கு கட்டுப்படியான விலை கிடைப்பதில்லை. தமிழகத்தில், 2000-2010 வரையுள்ள புள்ளி விவரங்களின்படி, ஏறக்குறைய 2 லட்சம் ஹெக்டேர் நெல் பயிரிடும் பரப்பு குறைந்துள்ளது. தமிழகத்தில் இருந்த 40,000 நீர் ஆதாரங்களில் 75 சதவிகித குளங்கள் ஆக்கிரமிப்பின் காரணமாக காணாமல் போய்விட்டன. விவசாய நிலங்கள், வீட்டுமனைகள் ஆக மாறி வருகின்றன. இப்போக்கினை தடுக்கவேண்டும்.. இதற்கென தேசிய விவசாயக் கொள்கைகள் உருவாக்கப்பட்டு, உரிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். விளைவிக்கும் பொருளுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்யும் காலம் வரவேண்டும் மூழ்கிக் கொண்டிருக்கும் விவசாயத்தை மீட்டெடுக்க அரசாங்கமும் அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டும்.