ஹேமந்த் சோரன் கைது.. பாஜகவின் பழிவாங்கல் நடவடிக்கை.! மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்.!

ஜார்கண்ட் மாநிலத்தில், நில மோசடி, நிலக்கரி ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடைபெற்றதாக அமலாக்கத்துறையினர் ஜார்கண்ட் மாநில முதல்வராக பொறுப்பில் இருந்த ஹேமந்த் சோரனை நேற்று இரவு கைது செய்தனர்.

முன்னதாக முதற்கட்ட விசாரணைக்கு நேரில் ஆஜரான சோரன், அடுத்து அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றத்தில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து , அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராவதற்கு முன்னரே ஜார்கண்ட் மாநில ஆளுநரிடம தனது ராஜினாமா கடிதத்தை அளித்துவிட்டார் சோரன்.

ஹேமந்த் சோரன் கைது.! ஜார்கண்ட் புதிய முதல்வராக சம்பாய் சோரன் தேர்வு.!

இதன் பிறகு அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகிய ஹேமந்த் சோரனிடம் பல மணிநேர விசாரணை முடிந்த பின்னர் அமலாக்கத்துறையினர் அவரை கைது செய்தனர்.

ஒரு மாநில முதல்வரை அமலாக்கத்துறையினர் கைது செய்த நடவடிக்கையை பல்வேறு எதிர்கட்சி அரசியல் தலைவர்கள் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் மத்திய அரசுக்கு எதிராக கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.

அதில் , ஹேமந்த் சோரன் கைது மூர்க்கத்தனமானது. இது மத்திய பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என அப்பட்டமாக தெரிகிறது. புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்தி ஒரு பழங்குடித் தலைவரை துன்புறுத்துவது மிகப்பெரிய தவறு. இந்த செயல்வெறுப்பையும், அதிகார துஷ்பிரயோகத்தையும் வெளிப்படுத்துகிறது. பாஜகவின் கேவலமான தந்திரங்கள் எதிர்க்கட்சிகளின் குரல்களை அடக்கிவிடாது.

பாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கையிலும், ஹேமந்த் சோரனின் தலைவணங்கா கொள்கை என்பது வலுவாக நிற்கிறது. இன்னல்களை எதிர்கொண்டாலும் அவரது மனஉறுதி பாராட்டுக்குரியது. பாஜகவின் மிரட்டல் தந்திரங்களை எதிர்த்துப் போராடுவதற்கான அவரது உறுதிப்பாடு என்பது அனைவருக்கும் ஒரு உத்வேகம் அளிக்கிறது என பதிவிட்டுள்ளார்.

ஹேமந்த் சோரன் கைதுக்கு பின்னர் ஜார்கண்ட் மாநில போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த சம்பாய் சோரனுக்கு எம்எல்ஏக்கள் ஆதரவளித்ததை அடுத்து, சம்பாய் சோரன், தன்னை முதல்வர் பதவிக்கு ஆதரவு அளித்த எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதங்களை ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் வழங்கியுள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment