காசா மருத்துவமனையின் கீழ் ஹமாஸின் ரகசிய தளம்.! வீடியோவை வெளியிட்ட இஸ்ரேல்.!

கடந்த அக்டோபர் 7ம் தேதி தென்மேற்கு பாலஸ்தீன பகுதியான காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் ஆயிரக்கணக்கான ராக்கெட் குண்டுகள் மூலம், மத்திய கிழக்கில் உள்ள நாடான இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவம் இன்றுவரை ஹமாஸ் அமைப்பினர் மீது தொடர்ந்து பதிலடி தாக்குதல் நடத்திவருகிறது.

ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் காசா மீதான வான்வெளி மற்றும் தரைவழி தாக்குதல்களை இஸ்ரேல் தீவிரப்படுத்தி வருகிறது.

இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து 20 நாட்களாக வான்வழி தாக்குதலை நடத்தி வந்த நிலையில், நேற்று முன்தினம் முதல் தரைவழி தாக்குதலை தொடங்கியது. அதன்படி, வடக்கு காசாவுக்குள் நுழைந்து டாங்கிகள் மூலம் இரவில் தாக்குதல் நடத்தி வருவதாகவும், ஹமாஸின் முக்கிய இடங்களை குறிவைத்து தரைவழி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையின் அடிப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் தலைமையகம் எப்படியிருக்கிறது என்பதை இஸ்ரேல் வீடியோ ஒன்றின் மூலம் வெளிப்படுத்தியுள்ளது. அதில் நிலத்தடி சுரங்கங்கள், ஆயுதக் கிடங்குகள், கணினிகள் மற்றும் போர் மற்றும் ஆலோசனை அறைகள் போன்றவைகள் உள்ளன.

அதோடு ஆயுதமேந்திய காவலர்கள் அங்கும் இங்கும் நடந்து செல்கின்றனர். ஐடிஎஃப்-ன் பதிவில். “ஷிஃபா மருத்துவமனை காசாவின் மிகப்பெரிய மருத்துவமனை மட்டுமல்ல, ஹமாஸின் பயங்கரவாத நடவடிக்கைக்கான முக்கிய தலைமையகமாகவும் செயல்படுகிறது. எந்தவொரு பயங்கரவாத உள்கட்டமைப்பையும் கண்டறிய இஸ்ரேல் பாதுகாப்புப் படை செயல்படும்.” என்று தெரிவித்துள்ளது.

மேலும், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போரில் காசாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், 15,000-க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளனர். இதில் 2,913 குழந்தைகள், 1,709 பெண்கள் மற்றும் 397 முதியவர்கள் அடங்குவர்.