ஜிவி கூட நட்பு தொடரும்…’விவாகரத்துக்கு யாரும் காரணம் இல்லை’ – சைந்தவி!

சென்னை : எங்கள் விவாகரத்துக்கு எந்தவிதமான வெளிக்காரணங்களும் இல்லை என்று பாடகி சைந்தவி கூறியுள்ளார்.

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் கலந்து பேசி விவாகரத்து முடிவு செய்து இருந்ததாக சமூக வலைத்தளங்களில் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துவிட்டார்கள். இருப்பினும், இவர்களுடைய தனிப்பட்ட முடிவை தங்களுக்கு ஏற்றபடி சில யூடியூப் சேனல்கள் மற்றும் சில பத்திரிக்கையாளர்கள், நெட்டிசன்கள் என பலரும் விமர்சித்து பேசி வந்தனர். அந்த விமர்சனங்களுக்கு அறிக்கை வெளியீட்டு ஜிவி பிரகாஷ் பதில் அளித்தும் இருந்தார்.

அவரை தொடர்ந்து பாடகி சைந்தவியும் வேதனையுடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் சைந்தவி கூறியிருப்பதாவது ” எங்களுடைய தனிப்பட்ட சுதந்திரத்திற்காக நாங்கள் எடுத்துக்கொண்ட இந்த முடிவை மதிப்பளித்து ஆதரவு கொடுக்கும்படி கேட்டுக்கொண்டு இருந்தோம். இருப்பினும், இன்னும் சில யூடியுப் சேனல்கள் தவறான விஷயங்களை வைத்து தகவலை பரப்பி வருவதை பார்க்கும்போது மனதிற்கு ரொம்பவே வேதனை அளிக்கிறது.

வெளிப்படையாகவே சொல்லப்போனால் எங்களுடைய விவாகரத்துக்கு வெளியில் இருக்கும் எந்த ஆட்களும் காரணம் இல்லை. ஒருவருடைய குணத்தை எந்தவித ஒரு ஆதாரமும் இல்லாமல் அவமதிப்பு செய்வது கொஞ்சம் கூட நியாயம் இல்லாத விஷயம். இந்த முடிவு எங்கள் முன்னேற்றத்திற்காக நாங்கள் இருவரும்  கலந்து பேசி தான் எடுத்துக்கொண்டோம்.

ஜி.வி.பிரகாஷும் நானும் பள்ளிப் பருவத்தில் இருந்தே 24 ஆண்டுகளாக நண்பர்களாக பழகி வந்து இருக்கிறோம். இனிமேலும் அந்த நட்பு தொடரும்” என சைந்தவி கூறியுள்ளார். மேலும், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், பாடகி சைந்த இருவரும் கடந்த 2013-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு கடந்த 2020-ஆம் ஆண்டு ஆண் குழந்தை ஒன்றும் பிறந்தது. கடந்த மே 13-ஆம் தேதி இருவரும் விவாகரத்து பெறுவதாக அறிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.