கார் விபத்தின் போது உயிரைக் காப்பாற்றும் கூகுள் அம்சம்.! இப்போது இந்தியாவிலும் அறிமுகம்.!

தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் முக்கிய பாதுகாப்பு அம்சமான கார் கிராஸ் டிடெக்ஷன் (Car Crash Detection) என்பதை கடந்த 2019ம் ஆண்டில், அறிமுகப்படுத்தியது. இந்த அம்சம் முதலில் அமெரிக்காவில் உள்ள பிக்சல் ஸ்மார்ட்போன் பயனாளர்களுக்கு மட்டுமே கிடைத்தது.

ஆனால் இப்போது இந்த அம்சம் இந்தியா உட்பட ஆஸ்திரியா, பெல்ஜியம், போர்ச்சுகல் மற்றும் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள பிக்சல் பயனாளர்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பயனர்களுக்கு, இந்த பாதுகாப்பு அம்சம் பிக்சல் 4ஏ, 6ஏ, 7, 7 ப்ரோ, 7ஏ மற்றும் சமீபத்தில் அறிமுகமான பிக்சல் 8 சீரிஸில் மட்டுமே கிடைக்கும்.

ஆனால் மற்ற நாடுகளில் உள்ள பயனர்களுக்கு இந்த அம்சம் பிக்சல் 4ஏ முதல் இதற்கு முன்னதாக அறிமுகமான மாடல்கள் மற்றும் பிக்சல் ஃபோல்டிலும் கிடைக்கும். இந்த அம்சத்தை ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரெஞ்சு, இத்தாலியன், டேனிஷ் உட்பட 11 மொழிகளில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கார் கிராஸ் டிடெக்ஷன்

கார் கிராஸ் டிடெக்ஷன் அம்சம் என்பது நீங்கள் ஒரு கார் விபத்தில் சிக்கியிருக்கும் போது, அது தானாகவே அவசரகாலச் சேவைகளைத் தொடர்புகொண்டு, நீங்கள் இருக்கும் இடத்தை பகிர்ந்துகொள்ளும். உங்கள் மொபைலின் லொகேஷன், மோஷன் சென்சார்கள் மற்றும் அருகிலுள்ள ஒலிகள் போன்ற தகவல்களைப் பயன்படுத்தி, கார் விபத்தானதுக் கண்டறியப்படுகிறது.

இந்த அம்சம் செயல்பட உங்கள் மொபைலுக்கு லொகேஷன், பிஸிக்கல் ஆக்டிவிட்டி மற்றும் மைக்ரோஃபோன் அனுமதிகள் தேவைப்படும். அவ்வாறு உங்கள் போன் கார் விபத்தானதைக் கண்டறியும் பட்சத்தில், தானாகவே உங்களுக்குத் தேவையான உள்ளூர் அவசர சேவை உதவி எண்களுக்கு கால் செய்யும்.

மேலும், விபத்து நடந்த இடத்தில் யாராவது இருந்தால், அவர்கள் உங்கள் மொபைலை எடுக்கும்போது, ​​உங்கள் மொபைல் லாக் செய்யப்பட்டிருந்தாலும் லாக் ஸ்கிரீன் செய்தியையும் அவசரத் தகவலையும் அவர்களால் பார்க்க முடியும். இந்த அம்சம் சரியாக செயல்பட உங்கள் மொபைலில் சிம் ஆனது இணைப்பில் இருக்க வேண்டும். ஒரு வேலை இந்த அம்சம் தவறுதலாக செயல்பட்டால் 60 வினாடிக்குள் அந்த அழைப்பை ரத்து செய்ய வேண்டும்.

எவ்வாறு இயக்குவது.?

கார் கிராஸ் டிடெக்ஷன் அம்சத்தை இயக்குவதற்கு உங்கள் பிக்சல் மொபைலில் இருக்கும் பர்சனல் சேஃப்டி ஆப்பை திறக்கவும். அதில் ஃபீச்சர்ஸ் என்பதை க்ளிக் செய்ய வேண்டும். அதில் கீழே இருக்கும் கார் கிராஷ் டிடெக்ஷன் என்பதை தொட்டு, செட்டப் என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். பிறகு அதில் கேட்டும் லொகேஷன், மைக்ரோஃபோன்களுக்கான அனுமதியை நீங்கள் உறுதிபடுத்த வேண்டும். இதே கார் கிராஸ் டிடெக்ஷன் அம்சம் ஆப்பிள் ஐபோனிலும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.