டெஸ்ட் உலகக்கோப்பையை மறந்துவிடுங்கள்… இந்திய அணி குறித்து மேத்யூ ஹைடன் கருத்து.!

டெஸ்ட் உலகக்கோப்பையை மறந்துவிடுங்கள் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இறுதிப்போட்டிக்கு முன் இந்திய அணிக்கு ஹைடன் அறிவுறுத்தியுள்ளார்.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நெருங்கியுள்ள நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் டெஸ்ட் உலகக்கோப்பைக்காக தயாராகி வருகின்றன. 2021 மற்றும் 2023 ஆம் ஆண்டு காலகட்டத்தில் அணிகள் பெற்ற வெற்றிகள் மற்றும் புள்ளிகளின் அடிப்படையில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்தியா இரண்டாவது முறையாக ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது, இம்முறை இந்தியா கோப்பையை வெல்லுமா என கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் ஐசிசி கனவு பற்றி கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, இந்தியா 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபியில் இங்கிலாந்திற்கு எதிராக வென்று கடைசியாக சாம்பியன் பட்டம் பெற்றது.

அதன் பிறகு, ஐசிசி தொடர்களில் இந்திய அணி தோல்வி பெறுவது தான் தொடர்கதையாகி வருகிறது. 2013 ஆம் ஆண்டிற்கு பின் நடந்த 9 ஐசிசி தொடர்களில்(டி-20, ஒருநாள், சாம்பியன்ஸ் ட்ராபி) ஒருமுறை கூட இந்திய அணியால் வெற்றிக்கோப்பையை பெற முடியவில்லை, அரையிறுதி வரை வந்தாலும் தோல்வியுற்று வெளியேறிவிடும். இது போன்ற நிலை தான் இந்திய அணிக்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்திய அணி தனது பலவீனமான மனநிலையோடு விளையாடுவதால் வெற்றிபெற முடியவில்லை என்று கூறிய ஹைடன், உங்களிடம் எவ்வளவு திறமை இருக்கிறது என்பதை விட வலிமையான மனநிலையுடன் விளையாடுவது தான் முக்கியம். கிரிக்கெட் என்பது இந்தியாவில் ஒரு மதமாக பார்க்கப்படுகிறது. வீரர்களால் எளிதாக வெளியில் நடமாட முடியாது, பாகிஸ்தானிலும் இதே நிலைமை தான்.

ஆனால் ஆஸ்திரேலியாவில் அப்படி கிடையாது, நாங்கள் விளையாட்டை ரசித்து, அனுபவித்து விளையாடி வருகிறோம். இந்தியர்களுக்கு அதில் கொஞ்சம் இடைவெளி தேவைப்படுகிறது. நீங்கள் கிரிக்கெட்டில் முடிவை (வெற்றி/தோல்வி) பற்றி கவலை படவேண்டாம்.

ட்ராபிக்காகவும் முடிவை பொருத்தும் நீங்கள் கவலைப்படுவதை விட்டு, விளையாட்டில் தற்போதைய நேரத்தை அனுபவித்து விளையாடுங்கள், உங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள். நிச்சயம் அதற்கான பலன் கிடைக்கும் என்று ஹைடன் கூறியுள்ளார். வரும் ஜூன் மாதம் 7இல் லண்டன் ஓவல் மைதானத்தில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Muthu Kumar