சிவகாசியில் இருவேறு இடங்களில் பட்டாசு விபத்து – பலி எண்ணிக்கை 11-ஆக அதிகரிப்பு!!

சிவகாசி அருகே இருவேறு இடங்களில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது. சிவகாசியில் இன்று ஒரே நேரத்தில் இருவேறு இடங்களில் பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே எம் புதுப்பட்டி ரெங்கபாளையத்தில் இயங்கிவரும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுந்திரமூர்த்தி என்பவருக்கு சொந்தமான கனிஷ்கர் பட்டாசு ஆலை வளாகத்தில் பட்டாசுகளை சோதனை செய்தபோது விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆலையில் புதிதாக தயாரித்த வெடியை பரிசோதனை செய்து பார்க்கும்போது கடையில் தீப்பொறி விழுந்து விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து நிகழ்விடத்திற்கு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த வெடி விபத்தில் படுகாயமடைந்த 2 பெண்கள் சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆலையில் தொடர்ந்து பட்டாசுக்கள் வெடித்து வருவதால் தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ரெங்கபாளையத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது.

ஏற்கனவே, 5 பேர் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மேலும் 5 பேரின் உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இந்த பட்டாசு விபத்தில் 9  பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதுபோன்று, சிவகாசி அருகே மாறனேரி தாலுகாவில் உள்ள கிச்சநாயக்கன்பட்டி பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த முத்து விஜயன் என்பவருக்கு சொந்தமான ஆர்யா பட்டாசு ஆலை மாரனேரி தாலுகாவுக்கு உட்பட்ட போடு ரெட்டியாபட்டியில் இயங்கி வருகிறது.

இன்று வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் அந்த அறையில் பணிபுரிந்து கொண்டிருந்த வேம்பு என்கிற தொழிலாளி உடல் கருகி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து மாரனேரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும்,  பட்டாசு விபத்து நிகழ்ந்த இடத்தில் மாவட்ட எஸ்பி சீனிவாச பெருமாள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். எனவே,  சிவகாசியில் ஒரே நேரத்தில் இருவேறு இடங்களில் ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சமும் நிலவி வருகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்