விவசாயிகளுக்கு ரூ. 201 கோடி நிவாரணம் அறிவித்த முதல்வர் மு.க ஸ்டாலின்

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட அதிகனமழையால் பாதிக்கப்பட்ட 2,60,909 விவசாயிகளுக்கு ரூ.201.67 கோடி நிவாரண நிதி வழங்கிட முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, நிவாரணத் தொகையை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தென்மாவட்டங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் வரலாறு காணாத அதிகனமழைப் பொழிவு ஏற்பட்டது.

தென்மாவட்டங்களின் பல பகுதிகளில் சராசரி ஆண்டு மழையளவை விட கூடுதலாக ஒரே நாளில் அதிகளவு மழைப்பொழிவு ஏற்பட்டது. அதிகனமழையினை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ள பாதிப்பால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதோடு, வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கும், பொது மற்றும் தனியார் கட்டமைப்புகளுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழை மற்றும் பெருவெள்ளத்தின் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை மற்றும் மதுரை ஆகிய 8 மாவட்டங்களில் பாதிப்பிற்குள்ளான 1,64,866 ஹெக்டேர் வேளாண் பயிர்களுக்கு, 1,98,174 விவசாயிகள் பயனடையும் வகையில் 160 கோடியே 42 லட்சத்து 41 ஆயிரத்து 781 ரூபாய் நிவாரணம் வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Read More – நாடாளுமன்ற தேர்தல்! திமுக கூட்டணியில் ஐயூஎம்எல், கொமதேக கட்சிகளுக்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு: வேட்பாளரும் அறிவிப்பு

மேலும், 38,840 ஹெக்டேர் தோட்டக்கலைப் பயிர்களுக்கு 62,735 விவசாயிகள் பயனடையும் வகையில் 41 கோடியே 24 லட்சத்து 74 ஆயிரத்து 680 ரூபாய் நிவாரணம் வழங்கிடவும், மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட மொத்தம் 2,60,909 விவசாயிகளுக்கு 201 கோடியே 67 லட்சத்து 16 ஆயிரத்து 460 ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும்” என கூறப்பட்டுள்ளது.

Leave a Comment