பிரதமர் மோடி, ராகுல் காந்தி பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு!

Election2024: தேர்தல் நடத்தை விதிமீறல் புகாரில் பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இரண்டாம் கட்டமாக நாளை 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவைத் தொகுதிகளில் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான பிரச்சாரம் கடந்த சில நாட்களாக அனல் பறக்க நடைபெற்று வந்த நிலையில், நேற்றுடன் நிறைவு பெற்றது.

அப்போது பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதனிடையே தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் மோடி காங்கிரஸை விமர்சித்தும், ராகுல் காந்தி பாஜகவை விமர்சித்தும் வருகின்றனர். இதில் குறிப்பாக சமீபத்தில் பிரதமர் மோடி காங்கிரஸை கடுமையாக விமர்சித்து இருந்தார்.

இதற்கு ராகுல் காந்தியும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறார். பிரதமரின் பேச்சுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டங்களை பதிவு செய்தனர். இதன்பின் மதம், சாதி, சமூகம் மற்றும் மொழி அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பிரதமர் மோடி வெறுப்பு பேச்சு பேசியதாக காங்கிரஸ் தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தது.

இஸ்லாமியர்கள் குறித்து அவதூறாக பேசியதாக புகார் அளிக்கப்பட்டது. அதேபோல் ராகுல் காந்தி மீதும் பாஜக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தது. இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறிய புகாரி அடிப்படையில் பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பதிலளிக்க இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நோடீஸ் அனுப்பியுள்ளது.

ஏப்ரல் 29ம் தேதி காலை 11 மணிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோரும் பதிலளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கட்சியின் நட்சத்திர பேச்சாளர் பேசும் பேச்சுக்கு கட்சி தலைவர்களே பொறுப்பு என்பதால் விளக்கமளிக்க நோடீஸ் அனுப்பப்பட்டுள்ளது.