சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு!வினாத்தாள் முன்கூட்டி வெளியான விவகாரம் …..
மத்திய அரசு, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வில் வினாத்தாள் முன்கூட்டி வெளியானது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
ஸ்டாஃப் செலக்சன் கமிசன் எனப்படும் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு பிப்ரவரி 17முதல் 21ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வின் வினாத்தாளை முன்கூட்டியே பெற்ற ஒருசில பயிற்சி மையங்கள் பணம்பெற்றுக்கொண்டு தேர்வர்களுக்கு வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரி பிப்ரவரி 27ஆம் தேதி முதல் டெல்லியில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தின் முன் தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களைச் சந்தித்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலும் இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். போராட்டக் குழுவின் பிரதிநிதிகள் டெல்லி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் திவாரி தலைமையில் சென்று தேர்வாணையத் தலைவரிடம் புகார் அளித்தனர்.
இந்நிலையில் வினாத்தாள் முன்கூட்டி வெளியானது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், இதனால் போராட்டத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இதனிடையே வினாத்தாள் வெளியானது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரிய மனுவை வரும் 12ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.