கோவை பாரதியார் பல்கலை கழகத்தின் பதிவாளரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை!
லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், கோவை பாரதியார் பல்கலை கழகத்தின் பதிவாளர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். லஞ்சப்புகாரில் கைதான துணை வேந்தர் கணபதியின் பதவிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிநியமனங்கள் குறித்த ஆவணங்களை அப்போது சேகரித்ததாக கூறப்படுகிறது.
பாரதியார் பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள பதிவாளர் வனிதாவின் அலுவலகத்திற்கு லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் ராஜேஷ் தலைமையில் 3 அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தினர். சுமார் அரைமணி நேரம் நடைபெற்ற விசாரணையின் போது பதிவாளர் அலுவலகத்திலிருந்து சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.
பதிவாளரின் கணினியிலிருந்தும் தகவல்களை லஞ்ச ஒழிப்பு போலீஸார் பெற்றுச் சென்றனர். உதவிப்பேராசிரியர் நியமனத்திற்கு லஞ்சம் பெற்ற விவகாரத்தில் கைதாகியுள்ள துணை வேந்தர் கணபதி கோவை நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளார். இம்மனு நாளை மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. ஜாமின் வழங்குவதற்கு அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், கணபதியின் பதவிக்காலத்தில் நடைபெற்ற நியமனங்கள் உள்ளிட்ட தகவல்களை சேகரித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காகவே பல்கலைக் கழகத்தின் பதிவாளரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.