ஆசிரியர் தகுதி தேர்வு தேதி அறிவிப்பு !
வருகிற அக்டோபர் மாதம் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான மறுதேர்வு தேதியும் வெளியிடப்பட்டிருக்கிறது.
ஆசிரியர் தேர்வு வாரியம், நடப்பாண்டுக்கான தேர்வுகள் திட்ட அட்டவணையை வெளியிட்டிருக்கிறது. இதன்படி, அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு வருகிற ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆயிரத்து 58 காலி பணியிடங்களுக்கான, பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான விரிவுரையாளர் தேர்வு சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இதில் தெரிவானவர்களில், சில மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதைத்தொடர்ந்து, சில வாரங்களுக்கு முன்னர், பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பாலிடெக்னிக் விரிவுரையாளர் காலி பணியிடங்களுக்கான மறுதேர்வு வருகிற ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான தேதி மே மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேதிகளை, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருக்கிறது. இதன்படி, ஆசிரியர் பட்டய படிப்பு முடித்தவர்களை கல்வித் தகுதியாக கொண்டவர்களுக்கான முதல் தாள் தேர்வு அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறுகிறது.
இதனைத் தொடர்ந்து, இளங்கலை, முதுகலை படிப்புகளுடன், B.Ed., முடித்தவர்கள் பங்கேற்கும், ஆசிரியர் தகுதி தேர்வு 2ஆம் தாள், அக்டோபர் 7ஆம் தேதி நடைபெறுகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி, ஜூலை முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என கூறப்பட்டிருக்கிறது. இதுத்தவிர, தொடக்க கல்வி அலுவலர்கள் தேர்வு, வருகிற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.