தனியார் பள்ளியில், கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து உயிரிழந்த மாணவனின் குடும்பத்துக்கு நிவாரண நிதி!
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை அருகே தனியார் பள்ளியில், கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து உயிரிழந்த எல்கேஜி மாணவனின் குடும்பத்துக்கு, ஒரு லட்சம் ரூபாய் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், காஞ்சிபுரம் மாவட்டம் சீனிவாசபுரம் கிராமத்தில் தனியார் மெட்ரிக் பள்ளியின் எல்கேஜி மாணவன் கீர்த்தீஸ்வரன், திறந்திருந்த கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து உயிரிழந்த செய்தி அறிந்து துயரமுற்றதாக முதலமைச்சர் கூறியுள்ளார். கீர்த்தீஸ்வரனின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இனிவரும் காலங்களில் இதுபோன்று நேரிடாதவகையில், தமிழகத்தில் அனைத்துப் பள்ளி, கல்லூரிகளில் பாதுகாப்பை உறுதி செய்ய உத்தரவிட்டிருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருப்பதாகவும், உயிரிழந்த கீர்த்திஸ்வரனின் குடும்பத்துக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.