அதேபோல, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 4,138 மையங்களில் 11 லட்சத்து 86,144 பேர் எழுதுகின்றனர். இதில் 2,846 பேர் மாற்றுத்திறனாளிகள். வெளிநாடுகளில் 71 மையங்களில் தேர்வு நடக்கிறது. 10, 12-ம் வகுப்புகளில் மொத்தம் 28 லட்சத்து 24, 696 பேர் தேர்வில் கலந்துகொள்கின்றனர்.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளின் உடல்நலனை கருத்தில்கொண்டு அவர்கள் தேர்வுக்கூடத்துக்குள் திண்பண்டங்கள் எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டு முதல் முறையாக மாற்றுத்திறனாளி மாணவர்கள் லேப்-டாப் மூலம் தேர்வெழுத சிபிஎஸ்இ சிறப்பு அனுமதி அளித்துள்ளது. எனினும் லேப்-டாப்பில் இணைய வசதி இருக்கக் கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
10-ம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 4-ம் தேதியும் 12-ம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 12-ம் தேதியும் நிறைவடைகின்றன. 2011 முதல் 2017-ம் ஆண்டு வரை சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு கட்டாய பொதுத்தேர்வாக நடத்தப்படவில்லை. மாணவர்கள் விரும்பினால் பொதுத் தேர்வாகவும், இல்லாவிட்டால் பள்ளி அளவிலான சாதாரண வருடாந்திர தேர்வாகவும் எழுத அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், 7 ஆண்டுகளுக்குப் பின் இந்த ஆண்டு முதல் மீண்டும் 10-ம் வகுப்புக்கு கட் டாய பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.