முதல்வர் மெத்தனம்.. மக்கள் பாதிப்பு – இபிஎஸ் கடும் குற்றசாட்டு!

அரசு துறைகள் ஒருங்கிணைந்து செயல்படாததே சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புக்கு காரணம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார். மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட துறைமுகம் பகுதிக்கு உட்பட்ட ராயபுரத்தில் இன்று காலை ஆய்வு மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அப்பகுதி மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

இதன்பின் சென்னை திருவொற்றியூரில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மழை, வெள்ளம் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்கை பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், மக்களுக்கு தேவையான உணவு, பால், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பெரும்பாலான பகுதிகளில் கிடைக்கவில்லை.

1137 மிமீ மழை… 363 தேங்கிய பகுதிகள்.. 1512 மரங்கள்… புள்ளி விவரங்களை வெளியிட்ட சென்னை மாநகராட்சி.!

புயல் எச்சரிக்கைக்கு பின் முதலமைச்சர் மெத்தனமாக இருந்ததால் மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். அதிமுக ஆட்சிக்காலத்தில் கனமழை பெய்தபோது திட்டமிட்டு செயல்பட்டோம். தற்போது அரசு துறைகள் ஒருங்கிணைந்து செயல்படாததே சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புக்கு காரணம்.

திமுக அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்துள்ளது. பாதிப்புக்கு முழு பொறுப்பை அரசுதான்  ஏற்க வேண்டும். ஒரு சொட்டு தண்ணீர் கூட நிற்காது என கூறினார்கள். ஆனால், சென்னை முழுவதும் குளம் போல் மழைநீர் நிற்கிறது. இதனால், மழைநீர் வடிகால் திட்டம் எந்த அளவுக்கு முடிந்திருக்கிறது என்பது தொடர்பாக அரசு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ரூ.800 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது, அதற்கு தக்க நிவாரணம் வழங்க வேண்டும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை பொழிவால் நெற்பயிர்கள் சேதமடைந்து உள்ளது. அப்பகுதியில் உள்ள விவாசயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.