உங்கள் உணவு வேண்டாம், நாங்கள் கொண்டு வந்துள்ளோம் – விவசாய பிரதிநிதிகள்

உங்கள் உணவு வேண்டாம், நாங்கள் கொண்டு வந்துள்ளோம் – விவசாய பிரதிநிதிகள்

Default Image

டெல்லியில் பேச்சுவார்த்தைக்கு முன்பு மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்த உணவை ஏற்க மறுத்த விவசாய பிரதிநிதிகள்.

மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று 8-ஆம் நாளாக ஹரியானா, குஜராத் பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லையில் கடும் குளிரை கூட பொருட்படுத்தாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையை உணர்ந்த மத்திய அரசு, விவசாயிகளுடன் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தியது. அதில், எந்த முடிவும் எடுக்கப்படாததால், 2ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடக்கும் என்று ஏற்கனவே மத்திய அரசு அறிவித்திருந்தது.

இதனையடுத்து, பேச்சுவார்த்தைக்கு பங்கேற்பதற்கு முன்பு விவசாய சங்க பிரதிநிதிகள், வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும் அதுவரை நாங்கள் இந்த போராட்டத்தை கைவிட மாட்டோம் எனவும் தெரிவித்தனர்.

இந்நிலையில், விவசாய சங்க பிரதிநிதிகளுக்கு, மதிய உணவு வழங்கப்பட்டது. ஆனால், இதனை ஏற்க மறுத்த அவர்கள், கொண்டு வந்த உணவை சாப்பிட்டனர். மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்த உணவையோ, தேநீரையோ, நாங்கள் ஏற்கவில்லை. எங்களுக்கான உணவை நாங்களே கொண்டுவந்துள்ளோம் என்று மத்திய அரசு உடனான பேச்சுவார்த்தைக்கு வந்த விவசாய தலைவர் பேட்டியளித்துள்ளார்.

Join our channel google news Youtube