பழனிக்கு மட்டும் ஏன் பஞ்சாமிர்தம் ஸ்பெஷல் தெரியுமா?.. அறிவியல் காரணங்கள் இதோ..!
சென்னை -பழனி என்றாலே நம் அனைவருக்கும் நினைவில் வருவது பழனி முருகனும் பஞ்சாமிர்தமும் தான். ஒவ்வொரு ஊர்களுக்கும் ஒவ்வொரு சிறப்புகள் இருக்கும் குறிப்பாக திருப்பதிக்கு லட்டு எப்படி சிறப்போ.. அதேபோல்தான் பழனிக்கு பஞ்சாமிர்தம்.. அது ஏன் பழனிக்கு மட்டும் பஞ்சாமிர்தம் ஸ்பெஷல் இன்று என்றாவது யோசித்து இருக்கிறீர்களா.. அப்படியே யோசித்துக் கொண்டே வாருங்கள் பதிவுக்குள் போகலாம்.
பழனி முருகனையும் பஞ்சாமிருதத்தையும் பிரிக்கவே முடியாது எனலாம். பழனம் என்ற பழம் தமிழ் சொல்லில் இருந்து வந்தது தான் பழனி. பழனம் என்றால் விளைச்சலை தரக்கூடிய நிலத்தை குறிக்கும். அப்படி நல்ல விளைச்சல் நிறைந்த பகுதி என்பதால் பழனி என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது. பழனியை பொறுத்தவரை கோவிலின் மூலவர் சிலை நவ பாசனத்தால் உருவாக்கப்பட்ட நோய் தீர்க்கும் மருந்தாக இருப்பதைப் போல் பஞ்சாமிருதத்திற்கும் மருத்துவ குணங்கள் உள்ளது.
தரமான பச்சை மலை வாழைப்பழம், தேன், கற்கண்டு, நாட்டு சக்கரை, பேரிச்சம்பழம் ஆகிய ஐந்து பொருட்களை ஒன்றாக்கி உருவாக்கப்படும் அமிர்தம் தான் பஞ்சாமிர்தம். மேலும் இதன் சுவையை இன்னும் கூட்ட நெய் மற்றும் ஏலக்காயும் சேர்க்கப்படுகிறது .இந்தப் பொருள்கள் அனைத்தும் நோய் எதிர்ப்பு சக்தியை கொண்ட இயற்கையான பொருட்களாகும்.
இவை அனைத்தையும் மருந்தைப் போல் பக்குவமாக தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் எளிதில் நோய்க்கிருமிகள் தொற்றும் வாய்ப்புகள் உள்ளதால் நோய் கிருமிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ளவே நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட இந்த பிரசாதம் வழங்கப்படுகிறது.
மேலும் அந்தப் பகுதிகளில் அதிகமாக பச்சை மலை வாழைப்பழம் கிடைக்கும். அந்தப் பகுதிகளில் கிடைக்கும் பொருட்களை வைத்து தயாரிக்கப்படுவதால் பஞ்சாமிர்தம் பழனிக்கே உரிய சிறப்பு பிரசாதமாக விளங்குகிறது.
தினமும் காலையில் இரண்டு ஸ்பூன் பஞ்சாமிர்தம் எடுத்துக் கொண்டால் இதில் உள்ள ப்ரக்டோஸ் ஒரு நாளைக்கு தேவையான செரோடோனின் ஹார்மோனை சுரக்கச் செய்கிறது என்று ஆராய்ச்சிகளும் உறுதிப்படுத்துகிறது.செரடோனின் என்பது மகிழ்ச்சி உணர்வை தூண்டும் ஹார்மோனாகும் .
இத்தகைய உலகப் புகழ்பெற்ற பஞ்சாமிர்ததிற்கு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் புவிசார் குறியீடு பெற்ற முதல் கோவில் பிரசாதம் என்ற சிறப்பையும் பழனி பஞ்சாமிர்தம் பெற்றுள்ளது.