மகாளய பட்சம் 2024 இல் எப்போது துவங்குகிறது..? வீடு தேடி வரும் முன்னோர்களை வழிபடுவது எப்படி?
மகாளயம் என்றால் பெரிய கூட்டம் ,பட்சம் என்றால் 15 நாட்கள். மறைந்த நம் முன்னோர்கள் அனைவரும் நம் இல்லத்திற்கு நாடிவரும் காலமே மகாளய பட்சம் நேரம் ஆகும்.
சென்னை –பித்ரு தோஷம் நீங்கி முன்னோர்களின் ஆசி பெற மகாளய பட்சத்தில் வீட்டில் வழிபடும் முறை,பலன்கள் பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம் அறியலாம்.
மகாளய பட்சம் என்றால் என்ன ?
நம் முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடையவும் நம் வாழ்வில் முன்னேற்றம் அடையவும் முன்னோர் வழிபாடு மிக முக்கியமாக கருதப்படுகிறது. அதிலும் புரட்டாசியில் பிரதமை துவங்கி வரும் மகாளய அமாவாசை வரை மகாளய பட்ச காலம் என்று கூறப்படுகிறது.
இது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கக்கூடிய காலமாகும். மகாளயம் என்றால் பெரிய கூட்டம் ,பட்சம் என்றால் 15 நாட்கள். மறைந்த நம் முன்னோர்கள் அனைவரும் நம் இல்லத்திற்கு நாடிவரும் காலமே மகாளய பட்சம் நேரம் ஆகும். இந்த காலத்தில் முன்னோர்கள் நம்மோடு தங்கும் காலமாகவும் கூறப்படுகிறது.
மகாளய பட்ச காலம் 2024;
இந்த ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி துவங்கி அக்டோபர் 2 ம் தேதி மகாளய அமாவாசை உடன் முடிவடைகிறது .மேலும் இந்த வழிபாட்டை ஸ்ரீ மகாவிஷ்ணு ராம அவதாரத்திலும் ,கிருஷ்ண அவதாரத்திலும் பிதிர் பூஜை செய்து முன்னோர் வழிபாடு செய்ததாக புராணங்கள் கூறுகின்றது. மகாளய பட்ச காலத்தில் நம் முன்னோர்கள் தன் சந்ததியினரை காண வருவதாக கூறப்படுகிறது .அப்படி வரும்போது தர்ப்பணம் செய்யாவிட்டால் அவர்கள் மனம் வருந்தி அது சாபமாக மாறி நம்மை பாதிப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றது.
முன்னோர்களுக்கு மிகவும் பிடித்தது எள்ளும் தண்ணீரும் இரைக்கும் முறையாகும் . இதுவே தர்ப்பணத்தில் மிக எளிமையான தர்ப்பணம் ஆகும் .இந்த 15 நாட்களும் தர்ப்பணம் செய்து பசியோடு இருப்பவர்களுக்கு ஒருவருக்காவது உணவு வழங்கினால் வீட்டில் வறுமை நீங்கும். குறிப்பாக பரணி நட்சத்தில் வரும் நாளில் செய்வது சிறப்பாக கூறப்படுகிறது.
ஏனெனில் பரணி நட்சத்திரத்தின் அதி தேவதையாக விளங்குபவர் எமதர்மராஜா. அந்த நாளில் வழிபாடு செய்தால் 15 நாட்கள் வழிபாடு செய்த பலன் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது .செப்டம்பர் 21 அன்று பரணி நட்சத்திரம் வருகின்றது.
மேலும் ஒவ்வொரு திதிக்கும் ஒவ்வொரு பலன்கள் கிடைக்கும் என்றும் சாஸ்திரத்தில் கூறப்படுகிறது.
- பிரதமை= பணம் சேரும்.
- துவதியை= குழந்தை பாக்கியம் கிடைக்கும் .
- திருதியை =நினைத்தது நடக்கும்.
- சதுர்த்தி= பகை விலகும்.
- பஞ்சமி =சொத்து சேரும்.
- சஷ்டி= புகழ் சேரும்
- சப்தமி =பதவி உயர்வு கிடைக்கும்.
- அஷ்டமி =சமயோகித புத்தி பெறலாம்.
- நவமி= பெண் குழந்தை பிறக்கும்,திருமண தடை விலகும்.
- தசமி = ஆசை நிறைவேறும்
- ஏகாதசி =படிப்பு மற்றும் கலையில் வளர்ச்சி கிடைக்கும்.
- துவாதசி= நகை அணிகலன்கள் சேரும் .
- திரயோதசி =விவசாயம் செழிக்கும், ஆயுள் ஆரோக்கியம் கூடும்.
- சதுர்தசி= பாவம் நீங்கி புண்ணியம் சேரும்.
மகாலய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால் 15 நாட்கள் செய்ய முடியாத தர்ப்பணம் செய்த பலன் கிடைக்கும். மேலும் இந்த 15 நாட்களும் மாலையில் முன்னோர்களுக்கு நல்லெண்ணெய் விளக்கேற்றி வழிபாடு செய்து பசியோடு இருக்கும் ஒருவருக்காவது தானம் கொடுக்க வேண்டும். இதனால் கர்ம வினை நீங்கி புண்ணியம் சேரும். நம் முன்னோர்களின் பசி தீர்வதோடு அவர்களின் பரிபூரண ஆசியுடன் நாம் எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.