விநாயகர் சதுர்த்தி 2024-ல் எப்போது ?. வரலாறும்.. வழிபாட்டு முறைகளும்..!

vinayar chaturthi (1)

சென்னை –அனைவருக்கும் இஷ்ட தெய்வம் ஆகவும், முதல் கடவுளாகவும் விளங்குபவர் விநாயகர்.. மாதத்தில் இரண்டு சதுர்த்தி தினங்கள் வருகின்றது.. அதில் வளர்பிறை சதுர்த்தி சதுர்த்தி விரதம் என்றும் தேய்பிறை சதுர்த்தி சங்கடஹர சதுர்த்தி என்றும் வழிபடப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஆவணி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை சதுர்த்தி மகா சங்கடஹர சதுர்த்தி எனவும் வளர்பிறையில் வரும் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி எனவும் கொண்டாடப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தி  2024 -ல் எப்போது ?

விநாயகரின் அவதார தினமாக ஆண்டுதோறும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படும். பலரும் கூடி பெரிய அளவிலான விநாயகர் சிலையை வைத்து வழிபட்டு அதனை மூன்றாம் நாள் நீர் நிலைகளில் கரைப்பது வழக்கமாகும்.

இந்த ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. பூஜைக்கு உகந்த நேரம்  காலை  10 ;45 முதல் 1;20 ஆகும்.

விநாயகர் அவதரித்த வரலாறு;

பார்வதி தேவி ஒருமுறை நீராடச் செல்லும்போது தனக்கு காவலுக்கு யாரும் இல்லை என்றும் தனக்கான காவலனை தானே உருவாக்கினால் எப்படி இருக்கும் என எண்ணி மஞ்சளால் ஒரு ஆண் குழந்தையின் உருவத்தை பிடித்து உயிர் கொடுத்தார். அந்தக் குழந்தையிடம் தான் நீராடச் செல்கிறேன் உள்ளே யாரையும் அனுமதிக்காதே என கூறிச்சென்றார். அப்போது அங்கு சிவபெருமான் உள்ளே நுழைய முயன்றார் , வந்திருப்பது பார்வதி தேவியின் மணவாளன் என்பதை அறியாத அந்தக் குழந்தை தன் தாய் உத்தரவை யாரும் மீற முடியாது என தடுத்தார்.

சிவபெருமான் எடுத்துக் கூறியும் அந்தக் குழந்தை கேட்காததால் குழந்தையின் தலையை வெட்டினார் சிவபெருமான். பிறகு உள்ளே சென்ற ஈசனை பார்த்த பார்வதி தேவி உள்ளே எப்படி வந்தீர்கள் என ஈசனை நோக்கி விசாரிக்கிறார். ஈசனும் அங்கு நடந்தவற்றை கூறினார். பார்வதி தேவி மனம் உடைந்து அழுகிறார். அந்த குழந்தைக்கு மீண்டும் உயிர் தருமாறு கேட்கிறார்.. மனம் இறங்கிய சிவபெருமானும் பூதக்கணங்களை அனுப்பி எந்த குழந்தை தாய் வேறு திசை நோக்கியும் பிள்ளை வடக்கில் தலை வைத்தும் படுத்திருக்கிறதோ அதன் தலையை வெட்டி வருமாறு உத்தரவிடுகிறார்..

அந்த பூதக்கணங்களும் யானை குட்டியின் தலையை கொண்டு வருகிறார்கள் .சிவபெருமான் அந்த தலையை அந்த ஆண் குழந்தையின் தலையில் ஒட்ட வைத்து உயிர் கொடுக்கிறார் இதோ உன் பிள்ளை உயிர் பெற்றது எனக் கூற.. பார்வதி தேவியோ இது அல்ல நான் உருவாக்கிய பிள்ளை எனக் கூறுகிறார். இதன் காரணமாகவே  பிள்ளை யார் என அழைக்கப்படுகிறார்.

விநாயகர் சதுர்த்தி பூஜை செய்யும் முறை ;

விநாயகரை வாங்க செல்லும்போது வெறும் கையுடன் செல்லக்கூடாது .கட்டாயம் மணப்பலகையில் மஞ்சள், குங்குமம் இட்டு எடுத்துச் செல்ல வேண்டும். பிறகு வாங்கி அதன் மீது விநாயகரை அமர வைத்து கொண்டு வர வேண்டும். அப்போது கண்கள் தனியாக கொடுக்கப்படும் . கண்களை சதுர்த்தி தினத்தில் பதிப்பது தான் முறையாகும். பிறகு சதுர்த்தி அன்று  தலை வாழை இலை போட்டு இலை நுனி வடக்கு திசை நோக்கி இருக்க வேண்டும் .

பிறகு அந்த இலையின் மீது பச்சரிசி பரப்பி வாங்கி வந்துள்ள சிலையை வைத்து அதற்கு அருகம்புல் மற்றும் எருக்கம் பூ மாலைகளை அணிவித்து ,குன்றின்  மணியை  கண்களாக  வைத்து, தொப்பை மீது ஒரு ரூபாய் நாணயம் வைக்க வேண்டும். பூஜை செய்ய தொடங்குவதற்கு முன் உங்களது குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வங்களை வணங்கிய பிறகு விநாயகருக்கு நெய்வேத்தியம் ஆக சுண்டல் ,பால், பொங்கல், பழங்கள், இனிப்பு வகைகள் வைத்து விநாயகருக்கு உரிய மந்திரங்கள் கூறி பூஜை செய்து வழிபட வேண்டும். பிறகு கோவிலுக்கு சென்று விநாயகரை வழிபட வேண்டும்.

இந்து  புராணங்களின்படி விநாயகர் சதுர்த்தி அன்று சந்திரனை தரிசிக்க கூடாது. அவ்வாறு தரிசித்தால்  தோஷத்தை ஏற்படுத்தும் என்பது ஐதீகம். களிமண்ணால் ஆன பிள்ளையாரை வீட்டில் மூன்று நாட்கள் காலை மாலை என இருவேளை பூஜை செய்ய வேண்டும். நெய்வேத்தியமாக ஒரு வேளை  சமர்ப்பிக்க வேண்டும். பிறகு மூன்றாம் நாள் நீர் நிலைகளில் கரைத்து விட வேண்டும். கரைக்க முடியாதவர்கள் சுத்தமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் சிலையை கரைத்து கால் படாத இடத்தில் ஊற்றி விட வேண்டும்.

ஆகவே இந்த விநாயகர் சதுர்த்தி நாளில் தும்பிக்கையானை நம்பிக்கையாக வழிபட்டால் சகல சௌபாக்கியமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்