மகா கந்த சஷ்டி விரதம் 2024 ல் எப்போது ?
மாதம் தோறும் இரண்டு சஷ்டிகள் வந்தாலும் ஐப்பசி மாதத்தில் வரும் சஷ்டி விரதம் மிக சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது ஏழு நாட்கள் கடைபிடிக்கப்படும் விரதமாகும்.
சென்னை –மகா கந்த சஷ்டி விரதம் எப்போது துவங்குகிறது என்றும் கந்த சஷ்டி விரதத்தின் சிறப்புகளையும் இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
மாதம் தோறும் இரண்டு சஷ்டிகள் வந்தாலும் ஐப்பசி மாதத்தில் வரும் சஷ்டி விரதம் மிக சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது ஏழு நாட்கள் கடைபிடிக்கப்படும் விரதமாகும்.
கந்த சஷ்டி 2024;
இந்த ஆண்டு நவம்பர் மாதம் இரண்டாம் தேதி சனிக்கிழமை கந்த சஷ்டி விரதம் துவங்கி நவம்பர் 7ஆம் தேதி சூரசம்காரமும் ,நவம்பர் எட்டாம் தேதி திரு கல்யாணமும் நடைபெற உள்ளது.
கந்த சஷ்டி விரதம் தோன்றிய வரலாறு ;
சூரபத்மனை அழிப்பதற்காக சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து 6 தீப்பொறியாக தோன்றிய முருகப்பெருமானை கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டு பின்பு பார்வதி தேவியால் ஆறு உருவங்களையும் ஒன்றாக்கி ஆறுமுகம் என பெயர் சூட்டப்பட்டார் .பிறகு திருச்செந்தூரில் சூரபத்மனை அளிக்க செல்வதற்கு முன் பஞ்சலிங்கத்தை வழிபட்டு சென்றார். தோல்வியை ஏற்காத சூர பத்மன் மரமாக மாறினான்.
பிறகு முருக பெருமான் தனது வேலால் அந்த மரத்தை இரண்டாகப் பிளந்து ஒருபுறம் சேவலாகவும் மற்றொரு புறம் மயிலாகவும் மாற்றி அவரின் கருணையால் தனது வாகனமாகவும் கொடியாகவும் ஏற்றுக் கொண்டார். இதனால் தேவர்கள் துயரம் நீங்கியது இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்திரன் தனது மகள் தெய்வானையை திருமணம் செய்து கொடுக்க விரும்பி இவர்களது திருமணம் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றது. இந்த போர் நடந்த காலகட்டத்தை நினைவு கூறும் வகையில் கந்த சஷ்டி விழா கொண்டாடப்படுகிறது.
இதனால் ஒவ்வொரு ஆண்டும் முருகப் பெருமானின் கோவில்களில் சூரசம்காரமும் நடைபெறுகிறது. குறிப்பாக அறுபடை வீடுகளில் திருச்செந்தூரில் சூரசம்காரம் மிகவும் பிரசித்தி பெற்றது .மேலும் திருத்தணியில் சூரசம்காரம் விழா நடைபெறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
யாரெல்லாம் விரதம் இருக்கலாம்?
குழந்தை வரத்திற்காக ஏங்குபவர்கள் ,தொழிலில் வளர்ச்சி அடைய வேண்டும் என நினைப்பவர்கள், வறுமைப் பிடியில் சிக்கி தவிப்பவர்கள், நோய் குணமாக வேண்டுபவர்கள், எதிரிகள் தொல்லை அதிகம் இருப்பவர்கள் இந்த விரதத்தை மேற்கொள்வதன் மூலம் நல்ல பலன்களை பெறலாம்.
விரதம் மேற்கொள்ளும் முறை;
விரதம் மேற்கொள்வதற்கு முதலில் உங்கள் உடல் நிலைக்கு ஏற்றவாறு விரதத்தை செய்ய வேண்டும் .ஒரு நாள் முழுவதும் விரதம் இருக்க முடிந்தவர்கள் இருந்து கொள்ளலாம். ஒரு வேளை உணவு மற்றும் பால், பழம் எடுத்துக் கொள்ளலாம் . மேலும் 6 நாள் விரதம் மேற்கொள்ள முடியாதவர்கள் சூரசம்காரம் அன்று விரதம் இருக்கலாம்.
மிளகு விரதம் இருக்கும் முறை;
விரதங்களில் மிகவும் கடுமையான விரதம் மிளகு விரதம் ஆகும் .முதல் நாள் ஒரு மிளகும் இரண்டாம் நாள் இரண்டு இது போல் ஆறு நாட்களும் ஒவ்வொரு நாளுக்கு ஏற்ப அதிகப்படுத்தி எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு ஏழாவது நாள் திருக்கல்யாணம் முடிந்து மிளகு விரதத்தை முடித்துவிட்டு படையலிட்டு உணவு அருந்த வேண்டும் .
விரதம் மேற்கொள்ளும் போது தண்ணீர் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பால் அருந்தி கொள்ளலாம் . மேலும் குளித்துவிட்டு தினமும் முருகப்பெருமானுக்கு பூஜை செய்ய வேண்டும். நெய்வேத்தியமாக கற்கண்டு, பால், பழம் ,பஞ்சாமிர்தம் இவற்றில் ஏதேனும் வைக்க வேண்டும் .
திணை மாவில் செய்யப்பட்ட விளக்கு ஏற்றுவது சிறப்பாக கூறப்படுகிறது. மேலும் சற்கோணம் கோலமிட்டு அதில் ஆறு நெய் விளக்குகளை ஏற்றி வழிபடுவது சிறந்த பலன்களை பெற்று தரும் . கந்த சஷ்டி கவசம் தினமும் காலை மாலை என படிக்க வேண்டும் .அது மட்டுமல்லாமல் வேல்மாறல், கந்த குரு கவசம் ,சண்முக கவசம், திருப்புகழ் போன்றவற்றையும் படித்து வழிபாடு செய்யலாம் .இவற்றைப் படிக்க முடியவில்லை என்றால் ஓம் சரவணபவ என்ற ஒரு மூல மந்திரத்தை கூறினாலும் போதுமானதாகும்.
பலன்கள் ;
சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பார்கள் ..இதன் உண்மை பொருள் என்னவென்றால் சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை தங்கும் என்பதாகும். சஷ்டியில் விரதம் இருப்பதால் முருகப்பெருமானே பிள்ளையாக பிறப்பார் என்ற நம்பிக்கையும் உள்ளது. குழந்தை வரம் மட்டும் அல்லாமல் வறுமை ஒளிந்து செல்வ செழிப்பான வாழ்க்கையும் புகழையும் முருகப்பெருமான் பெற்றுத் தருவார் என்ற நம்பிக்கையும் கந்த சஷ்டி விரதத்தின் பலன்களாகவும் கூறப்படுகிறது.