ஆடி மாதத்தில் என்ன செய்யலாம்.? என்ன செய்யக்கூடாது ? வாங்க தெரிஞ்சுக்கலாம்..
ஆடி மாதம் -ஆடி மாதத்தில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாதது என்பதை பற்றி இப்பதிவில் தெளிவாக தெரிந்து கொள்வோம்.
ஆடி மாதம் என்றாலே நாம் நினைவுக்கு வருவது ஆடி தள்ளுபடியும் அம்மனுக்கு கூழ் ஊற்றுவதும் தான். அதைவிட பல சிறப்புகளை இந்த மாதம் கொண்டுள்ளது.
ஆடி மாதத்தின் சிறப்புகள்;
ஆடி மாதம் என்பது வழிபாட்டிற்கே உகந்த மாதமாகும் . அதிலும் அம்மன் வழிபாடு , குலதெய்வ வழிபாடு,மற்றும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க உகந்த மாதமாகும் ஆடி வெள்ளி , ஆடி 18 , ஆடி அமாவாசை, ஆடித்த பசு போன்ற நாட்கள் மிக சிறப்பான நாளாக கூறப்படுகிறது.ஆடி மாத பிறப்பு என்பது தட்சணாயணம் ஆரம்பம் ஆகும் காலமாகும் . ஆடி முதல் மார்கழி வரை தட்சணாயன காலமாகும். இது தேவர்களின் இரவு காலமாகும்..
இந்த புண்ணிய காலத்தில் புனித நீர்களில் நீராடுவதற்கு சிறந்த மாதமாக கூறப்படுகிறது . ஆடி மாதத்தை கணக்கிட்டு தான் பண்டிகைகளின் தொடக்கம் ஏற்படுகிறது. இந்த மாதம் முழுவதும் கிராமப்புறங்களில் காவல் தெய்வமாக விளங்கும் மாரியம்மன் ,மதுரை வீரன் ,அய்யனார், மாடசாமி ,கருப்பணசாமி போன்ற கிராம தேவதைகளுக்கு பூஜைகளும் விழாக்களும் நடைபெறும்.
மேலும் இந்த மாதத்தில் சிவனின் சக்தியை விட பார்வதி தேவியின் சக்தி அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் திருநெல்வேலியில் உள்ள சங்கரன்கோவிலில் 12 நாட்கள் அம்மனின் ஆடித்த பசு திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஹரியும் சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்தவே இந்த விழா நடத்தப்படுகிறது.
ஆடி மாதம் சுக்ல பட்ச ஏகாதசி அன்று அன்னதானம் செய்து வந்தால் சகல சௌபாக்கியமும் கிடைக்கும் என்பது ஐதீகமாகும் .மேலும் இம்மாதத்தில் அம்மனுக்கு சாற்றப்படும் வளையல்களை அணியும் போது திருமண பாக்கியமும் குழந்தை பாக்கியமும் கிட்டும்.
ஆடி மாதம் செய்ய வேண்டியவை;
ஆடி மாதத்தில் சூரியனிடமிருந்து வெளிப்படும் கதிர்களில் பிராணவாயு அதிகம் இருக்கும். இது உயிர்பிக்க சிறந்த மாதமாக கூறப்படுகிறது. அதனால் தான் விதை விதைக்க உகந்த மாதம் ஆகும். இந்த மாதத்தில் தான் தென்மேற்கு பருவமழை தொடங்குகிறது. இதன் மூலம் பயிர்கள் செழிப்பாக வளரும். அதனால்தான் நம் முன்னோர்கள் ஆடி பட்டம் தேடி விதை என்று கூறுகிறார்கள்.
இம்மாதத்தில் விதை விதைத்தால் கார்த்திகை மற்றும் தை மாதங்களில் நெல் அறுவடை ஆகிவிடும் என்பதை கணக்கில் கொண்டு கூறியுள்ளனர். திருமணமான பெண்களுக்கு தாலி பெருக்கி போடுதல் மற்றும் தாலி கயிறு மாற்றுதல் போன்றவற்றை செய்ய உகந்த மாதமாகும். நேர்த்திக்கடன்கள், வழிபாடு ,பூஜைகள் போன்றவற்றை செய்யவும் சிறந்த மாதமாக கருதப்படுகிறது.
ஆடி மாதம் செய்யக்கூடாதவைகள்;
ஆடி மாதம் வேப்ப மரத்தை வெட்டக்கூடாது.. ஏனென்றால் வேப்பமரம் அம்மனின் சுரூபமாக கூறப்படுகிறது. இந்த மாதம் அம்மனுக்கே உகந்த மாதமாகும். வீடு குடி போதல், புதுமனை புகுவிழா போன்றவற்றை செய்யக்கூடாது. குழந்தைகளுக்கு மொட்டை அடித்தல் கூடாது.
நிச்சயதார்த்தம் திருமணம் போன்றவற்றையும் மேற்கொள்ளக்கூடாது, இம்மாதத்தில் உப்பில்லாமல் செய்யப்படும் அவ்வையார் கொழுக்கட்டையை ஆண்கள் சாப்பிடவோ அதில் கலந்து கொள்ளவோ கூடாது.
எனவே ஆடி மாதத்தின் சிறப்புகளை அறிந்து பூஜைகளையும் வழிபாட்டுக்களையும் நேர்த்தியாக செய்து அதன் பலன்களை பெறுவோம்.