நெல்லையப்பர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜை..!! 24 தேதி தொடங்குகிறது..!!

Default Image

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 27-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதற்காக கோவிலில் பாலாலயம் செய்யப்பட்டு கோவில் உள்பிரகாரம், வெளி பிரகாரம், ராஜகோபுரம், விமானங்கள் ஆகியவற்றில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு உள்ளன.

கும்பாபிஷேக பூஜை நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு அனுக்ஞை மற்றும் விக்னேசுவர பூஜையுடன் தொடங்குகிறது. தொடர்ந்து புண்யாகவாசனம், தனபூஜை உள்ளிட்டவை நடக்கின்றன. 24-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) யாகசாலை பூஜை தொடங்குகிறது. இதையொட்டி நெல்லையப்பர் கோவிலின் வடக்கு புறத்தில் உள்ள நின்றசீர்நெடுமாறன் கலையரங்கத்தின் அருகில் யாகசாலை அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

இந்த யாகசாலையில் 82 யாகசாலை பீடங்களும், 82 யாக குண்டங்களும் அமைக்கப்பட்டு உள்ளன. இதற்கு வர்ணம் பூசும் பணி வேகமாக நடந்து வருகிறது. மேலும் யாகசாலைகள் அலங்கரிக்கும் பணியும் நடந்து வருகிறது. விழாவில் தினமும் கணபதி ஹோமம், பிரம்மச்சாரி பூஜை, கஜபூஜை, கோபூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை, நவகிரக ஹோமம், சாந்தி ஹோமம் உள்ளிட்டவைகள் நடக்கிறது.

24-ந் தேதி மாலை 5.30 மணிக்கு விக்னேசுவர பூஜை, யாகசாலைக்கு புனித நீர் கொண்டு வருதல், முதல் கால யாகசாலை பூஜை நடக்கிறது. மறுநாள் காலையில் 2-ம் கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி தீபாராதனை, மாலையில் 3-ம் கால யாகசாலை பூஜை, பிரதான மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல், 26-ந் தேதி காலையில் 4-ம் கால யாகசாலை பூஜை, மாலையில் விசேஷ சாந்தி, 5-ம் கால யாகசாலை பூஜை, தீபாராதனை நடக்கிறது.

27-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு 5-ம் கால யாகசாலை பூஜை, நாடி சந்தானம், பரிவார மூர்த்திகளின் யாகசாலை பூர்ணாகுதி, மகா பூர்ணாகுதி தீபாராதனை நடக்கிறது. காலை 7 மணிக்கு யாகசாலையில் இருந்து மேளதாளம் முழங்க புனித நீர் கோபுரம், விமானம், மூலவர் சன்னதிக்கு எடுத்துச்செல்லப்படுகிறது.

9.30 மணிக்கு மேல் 10.25 மணிக்குள் நெல்லையப்பர், வேனுவனநாதர், காந்திமதி அம்மாள் மற்றும் ராஜகோபுரம், விமானங்கள், பிரதான மூர்த்திகள், சமஸ்த வேதமூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து மாலை 4 மணிக்கு மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனை, இரவு 7 மணிக்கு சுவாமி அம்பாள் திருக்கல்யாணம், பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடக்கிறது. கும்பாபிஷேகத்தன்று மதியம் 12 மணிக்கு நெல்லை பொருட்காட்சி திடலில் அன்னதானம் நடக்கிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்