இன்று தன்வந்திரி தீபாவளி கொண்டாட்டம்… உருவான வரலாறும்.. வழிபாட்டு முறைகளும்….
தீபாவளி பண்டிகையானது தமிழகத்தில் ஒருநாள் பண்டிகையாக கொண்டாடப்பட்டாலும், வடமாநிலங்களில் இன்று முதல் புதன் கிழமை வரையில் 5 நாள் தீபாவளி திருநாள் கொண்டாடப்படுகிறது.
தீபாவளி பண்டிகையின் முதல் நாளான இன்று (வெள்ளி – நவம்பர் 10, 2023 ) தந்தேராஸ் எனப்படும் தன்வந்திரி தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்த தீபாவளியை ஆயுர்வேத தீபாவளி என்றும் மக்கள் அழைக்கின்றனர்.
வடமாநிலங்களில் கொண்டாடப்படும் 5 நாள் தீபாவளி கொண்டாட்டம்.! ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதம்…
தீபாவளி தினங்கள் :
அதே போல, நாளை சனிக்கிழமை (நவம்பர் 11, 2023) ஜோதி தீபாவளி என்றும், அடுத்த நாள் ஞாயிறு ( நவம்பர் 12, 2023) தீபாவளி என்றும், செவ்வாய் ( நவம்பர் 14, 2023) – கோவர்தன் தீபாவளி என்றும், புதன் (நவம்பர் 15, 2023)- சகோதர தீபாவளி என்றும் கொண்டாடப்படுகிறது.
தனத்ரயோதசி தீபாவளி :
தனத்ரயோதசி தீபாவளி நாளில் திருமால் அவதாரமான தன்வந்திரி மற்றும் லட்சுமி தேவிக்கு பூஜை செய்யப்படுகிறது. மேலும் இந்த நாளில் தங்கம், வெள்ளி, சொத்துக்கள், வாகனங்கள் போன்றவற்றை வாங்குவதற்கு ஏற்ற நாளாக கருதப்படுகிறது. இதற்கு ஏற்ற நேரம் காலை 6.20 முதல் இரவு 8.19 வரை ஆகும்.
உருவான வரலாறு :
பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் வேண்டி கடைந்த போது , பாற்கடலில் அமிர்த கலசத்தோடு தோன்றிய திருமால் அவதாரம் தான் தன்வந்திரி. மருத்துவ கடவுளாக போற்றப்படும் தன்வந்திரியை ஆராதிக்கும் வகையில் இன்று கொண்டாடப்படும் பண்டிகை தான் தன்வந்திரி தீபாவளி.
இன்று தன்வந்திரி பகவானை நினைத்து பூஜை செய்து வழிபட்டால் , தீராத நோய்கள் தீரும் என்பது ஐதீகம். இன்றைய நாளில் தன்வந்திரி பகவானுக்கு மருத்துவர் உடை அணிவித்து கூட பூஜைகள் நடைபெறும் .
மருந்தில் தன்வந்திரி :
தீபாவளி தினத்தில் எப்படி எண்ணெயில் லட்சுமி, சீயக்காயில் சரஸ்வதி, சந்தனத்தில் பூமாதேவி, குங்குமத்தில் கவுரி, மலர்களில் மோகினி, தண்ணீரில் கங்கை, இனிப்பு பலகாரத்தில் அமிர்தம், புத்தாடையில் மகாவிஷ்ணு ஆகியோர் உறைவதாகச் சொல்கிறோமோ, அதுபோல் தீபாவளி மருந்தில் தன்வந்திரி பகவான் இருக்கிறார் என்பதும் ஐதீகம்.