ஈசானிய குளத்தில் ஈசனின் தீர்த்தவாரி..!திருவண்ணாமலையில் கோலாகலம்..!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடக்கும் விழாக்களில் தீர்த்தவாரியும் ஒன்று. ஈசானிய குளம், அய்யங் குளம், தாமரை குளம், கலசபாக்கத்தில் செய்யாறு, மணலூர்பேட்டையில் தென்பெண்ணை ஆற்றில் நடைபெறும் தீர்த்தவாரி நிகழ்ச்சிகளில் அருணாசலேஸ்வரர் கலந்து கொள்வார். அதன்படி, திருவண்ணாமலை ஈசானிய குளத்தில் நேற்று தைப்பூசத்தை முன்னிட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.
இதனை முன்னிட்டு காலையில் அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து மேளதாளத்துடன் அருணாசலேஸ்வரர் ஈசானிய குளத்திற்கு புறப்பட்டார். அங்கு தீர்த்தவாரி நடந்தது. அப்போது அருணாசலேஸ்வரர் சூலத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாலை வரை அங்கு பக்தர்களுக்கு அருள்பாலித்துவிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு திரும்பினார்.
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை கோவில் வரலாற்று படி திருவண்ணாமலை பகுதியை வல்லாள மகாராஜா ஆண்டு வந்ததாகவும்,இந்த மகரராஜாவுக்கு நெடுநாட்களாக குழந்தை பாக்கியாம் இல்லாத நிலையில் திருவண்ணாமலை ஈசனை நினைத்து மன முருகி வேண்டினார். கனவில் காட்சியளித்த ஈசன் இந்த பிறவியில் உனக்கு குழந்தை பாக்கியம் இல்லை அதனால் என்னை உன் மகனாக நினைத்து கொள்.இந்த பிறவியில் நானே உனது மகன் என்று கூறிய ஈசனின் வாக்கு படியே அவரையே மகனாக பாவித்து ஆட்சியை வந்துள்ளார்.
தைப்பூசதன்று அருணாசலேஸ்வரர் ஈசானிய குளத்தில் நடைபெறுகின்ற தீர்த்தவாரியில் கலந்துகொண்டு விட்டு மாலையில் மேளதாளங்கலுடன் கோவிலுக்கு திரும்பி செல்வார்.
அன்றைய நிகழ்வின் போது போர்க்களத்திற்கு சென்ற மகராஜா இறந்த செய்தியானது அருணாசலேஸ்வரர் தெரிவிக்கப்படுகிறது.தன்னை மகனாக நினைத்து பாசத்தை பொழிந்த வல்லாள மகாராஜாவின் இறந்த செய்தியை கேட்டு மேளதாளங்கள் இல்லாமல் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு திரும்புவார் என்று கூறப்படுகிறது.
இந்த நிகழ்வை நினைவுப்படுத்தும் விதமாக இன்று நடைபெற்ற தீர்த்தவாரியில் மேளதாளங்கள் உடன் கலந்து கொண்டு தீர்த்தவாரியை முடித்துவிட்டு அருணாசலேஸ்வரர் மாலை கோவிலுக்கு செல்லும் போது வல்லாள மகாராஜா இறந்த செய்தி தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து மேளதாளங்கள் இல்லாமல் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு திரும்பினார்.