புது வீட்டுக்கு கிரஹப்பிரவேசம் செய்யும் போது முதலில் இதைத்தான் பண்ணணுமாம்..!
கிரஹப்பிரவேசம் -புதிதாக நாம் கட்டிய வீட்டுக்குச் செல்லும் போது சில வழிமுறைகளை நாம் கடைப்பிடிப்பது அவசியம் .அந்த வகையில் புது வீடு குடி போக உகந்த மாதங்கள், தவிர்க்க வேண்டிய மாதங்கள் ,முதலில் நாம் எடுத்துச் செல்ல வேண்டிய பொருள்கள் என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஒரு வீட்டின் நிம்மதி என்பது அந்த வீட்டின் அமைப்பு மற்றும் அங்குள்ள மனிதர்களைப் பொறுத்து தான் அமையும். முன்பெல்லாம் வீடு கட்டும் போதே வீட்டிற்கு வயது, ஜாதகம் பார்த்து செய்யப்பட்டது என கூறப்படுகிறது. மாதங்களில் ஆக்கல் மாதம் அழித்தல் மாதம் என ஜோதிட ரீதியாக கூறப்படுகிறது.
புது வீட்டுக்கு செல்ல சிறந்த மாதங்கள்:
சித்திரை, வைகாசி, ஆவணி ,ஐப்பசி, கார்த்திகை, தை இந்த மாதங்கள் ஆக்கல் மாதமாக கூறப்படுகிறது.
கிழமைகள்:
திங்கள், புதன், வியாழன் ,வெள்ளி, ஞாயிறு ஆகிய தினங்களில் புது வீடு கிரஹப்பிரவேசம் செய்யலாம்.
தவிர்க்க வேண்டிய மாதங்கள்:
ஆனி , ஆடி ,புரட்டாசி, மார்கழி ,மாசி ,பங்குனி இந்த மாதங்களில் புது வீடு குடி போகுதல் மற்றும் கிரஹப்பிரவேசம் செய்யக்கூடாது என கூறப்படுகிறது .
புது வீட்டுக்குள் முதலில் எடுத்துச் செல்ல வேண்டியவைகள்:
வீட்டில் வாழப்போகும் குடும்பத் தலைவி மற்றும் தலைவனின் ஜாதகத்தை பார்த்து கிரகப்பிரவேசம் செய்வது மிகச் சிறப்பு ,அதுவும் பிரம்ம முகூர்த்தம் என சொல்லப்படும் அதிகாலை 4-6 இந்த நேரத்தில் செய்வது மிக மிக சிறப்பாகும்.
முதலில் பசுமாட்டை அழைத்துச் செல்லவும் .இது மகாலட்சுமியின் ஸ்ரூபம் எனவும் பூலோகத்தின் காமதேனு என கூறப்படுகிறது. மங்களப் பொருட்களான மஞ்சள் பச்சரிசி, வெல்லம், உப்பு, பருப்பு, குத்துவிளக்கு, நிறைகுடம் தண்ணீர் இந்த பொருட்களையும் எடுத்துச் செல்ல வேண்டும். இதில் முதலில் அந்த வீட்டின் குடும்பத் தலைவி எடுத்துச் செல்ல வேண்டியது நிறைகுடம் தண்ணீர் தான்.
இந்த முறைகள் சொந்த வீட்டுக்கு மட்டுமல்லாமல் வாடகை வீட்டிற்கு குடி போகும் போதும் பின்பற்றலாம். ஆனால் மிக ஆடம்பரம் தேவையில்லை. மங்களப் பொருட்கள் எடுத்துச் செல்வது மற்றும் பால் காய்ச்சுதல் போதுமானதாகும்.
எனவே மகாலட்சுமி உங்கள் வீட்டில் நிரந்தரமாக தங்க புது வீட்டுக்கு குடி செல்லும்போது இந்த முறைகளை கையாளுங்கள்.