இந்தக் கோயிலில், சனிபகவான் தனிச்சந்நிதியில் தம் தேவியருடன் ஆதிபிருஹத் சனீஸ்வரர் எனும் மங்களசனீஸ்வரர் எழுந்தருளிஅருள்பாலிக்கிறார்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமியெங்கும் மகாபிரளயம் உண்டாகும். பூமியில்உள்ளஉயிரினங்கள்மறைந்து மீண்டும் தோன்றும். அப்படியொரு பிரளய காலத்தின் முடிவில் பூமியில், மீண்டும் உயிரினங்கள்தோன்றவும். மனிதகுலம் தழைக்கவும் ஒரு வைகாசி மாத திருதியைநன்னாளில் பூவுலகில் விளங்குளம் கிராமத்தில் இறைவன் அட்சயபுரீஸ்வராகதோன்றினார் என்கிறது ஸ்தல புராணம்! .
அட்சயப் பாத்திரம் போல், அள்ள அள்ளக் குறையாமல், அருளும் பொருளும் தந்தருளும் இந்த ஆலயத்தில் அம்பாளின் திருநாமம் அபிவிருத்தி நாயகி. அதாவது, கணவருக்கு நிகராக, இவளும் நமக்கெல்லாம் அபிவிருத்தியைத் தந்தருளும் கருணைக் கடல் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்!
ஆக, அட்சய திருதியை நாளிலும் வெள்ளி, ஞாயிறு, திங்கட்கிழமை முதலான நாட்களிலும் விளங்குளம் வந்து, சிவபார்வதியைத் தரிசித்தால், சகல செல்வங்களும் பெற்று இனிதே வாழலாம் என்பது ஐதீகம்!
எல்லாவற்றையும் விட, முக்கியமாக சனீஸ்வரர் ஆதிபிருஹத் சனீஸ்வரராக, மங்கள சனீஸ்வர பகவானாக இங்கே காட்சி தந்து, அருள்பாலிக்கிறார். சனிக்கிழமைகளில், இவரை வந்து தரிசியுங்கள், சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு ஏதேனும் ஒருநாளில், இங்கு வந்து சனிபகவானுக்கு வஸ்திரம் சார்த்தி, வணங்குங்கள். சகல யோகங்களும் தந்தருள்வார் மங்கள சனீஸ்வரர்!
சனீஸ்வர பகவான் நீதிமான். நீதி தவறாமல் இருப்பவர்களை ஒருபோதும் ஒன்றும் செய்யமாட்டார். தவறுசெய்பவர்களுக்கு தண்டனை அளிப்பதில் நீதி தவறாதவர். சூரியனின் மனைவி சமுக்ஞை.இவருடைய மகன் யமன், காலப்போக்கில் சூரியனின் மனைவியான சமுக்ஞைக்கு சூரியனின் வெப்பத்தை அருகிலிருந்து தாங்கிக் கொள்ளமுடியவில்லை.
தன்னைப் போலவே உருவம் கொண்ட சாயாதேவி என்ற பெண்ணைப் படைத்து தன் கணவரான சூரிய பகவானிடம் விட்டுவிட்டு, சொல்லாமல் தந்தையின் வீட்டுக்குச் சென்றுவிட்டார். சூரியனும் சாயாதேவியை தன் மனைவி என்றே நினைத்து வாழ்ந்தார். அதன் பலனால் சூரியன்- சாயாதேவி தம்பதிக்கு மகனாக சனிபகவான் பிறந்தார்.
பிள்ளைகள் வளர்ந்து வரும்போது யமனுக்கும், சனிக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டதாம். ஒருகட்டத்தில், யமன் சனி பகவானின் ஒருகாலைத் துண்டித்துவிட்டார். அதனால் வருத்தமடைந்த சனிபகவான் தன் கால் ஊனம் நீங்கவேண்டி மனிதஉருவில் பூமியெங்கும் சுற்றித்திரிந்தார். அப்படியான வேளையில், விளாமரங்கள் அடர்ந்த வனப்பகுதிக்கு வந்தார். அங்கே இருந்த விளாமரத்தின் வேர் தடுக்கி பள்ளத்தில் விழுந்தார்.
அது, சித்திரை மாதத்தில், பூசநட்சத்திரம், வளர்பிறை திருதியைதிதியுடன் கூடிய நன்னாள். சனிக்கிழமை சனிபகவான் விழுந்த இடத்தில் பலயுகங்களாக மறைந்திருந்த பூசஞானவாவி என்ற தீர்த்தம் பீரிட்டுக் கிளம்பியது. அட்சயபுரீஸ்வரர் அருளால் சனிபகவானின் ஊனம் நீங்கியது. சனி பகவானை தீர்த்தம் மேலேஎழுப்பிக்கொண்டு வந்நது.
அட்சபுரீஸ்வரர் அருளால் தன் ஊனம் நீங்கி விட்டதை உணர்ந்து சனிபகவான் சிவனாரை வழிபட்டார். சிவபெருமான் அவருக்கு திருமண வரம் வழங்கி மந்தா, ஜேஷ்டா, ஆகிய தேவியரை திருமணம் செய்து கொள்ள அருளாசி வழங்கினார்.
அன்று முதல், இங்கே, இந்தத் தலத்தில், தன் துணைவியருடன் திருமணக் கோலத்தில் மங்கள சனீஸ்வரராகக் காட்சி தந்து அருள்பாலிக்கிறார். விளாமரங்கள் சூழந்த இந்த வனம், பிறகு வசிப்பிடமானது. அப்போது விளங்குளம் எனப் பெயர் அமைந்ததாகச் சொல்கிறது ஸ்தல வரலாறு.
பிரளயம் முடிந்து மனித இனங்கள்தோன்றுவதற்கு முன் னரே, சனிபகவான் முதன் முதல்அமர்ந்த தலம் இது. பிருஹத் என்றால்பெரிதான என்று அர்த்தம். எனவே, ஆதியில் தோன்றிய பெரிய சனீஸ்வரர் என்றுபொருள்படும்படி ஆதி பிருஹத் சனீஸ்வரர் என்றும் மங்கள சனீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.
சனி தோஷம் தீர்த்து, சங்கடங்கள் அனைத்தையும் நீக்கி அருள்பவராக சனி பகவான் இங்கே எழுந்தருளியிருக்கிறார். வாழ்வில் ஒருமுறையேனும் விளங்குளம் வந்து அட்சயபுரீஸ்வரரையும் அபிவிருத்தி நாயகியையும் தரிசியுங்கள். முக்கியமாக, மங்கள சனீஸ்வரரை வணங்கி வழிபடுங்கள். இனி, உங்கள் வாழ்க்கையும் மங்களகரமாக அமையும் என்பது உறுதி!
source: dinasuvadu.com