தெப்பத்திரு விழா சுசீந்திரம்..! தாணுமாலயசாமி கோவிலில் தொடங்கியது..!!

Default Image

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை தெப்பத்திருவிழா, 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான சித்திரை தெப்பத்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவையொட்டி நேற்று காலை 6 மணிக்கு தம்பையா ஓதுவாரின் திருமறை பாராயணம் நடந்தது. தொடர்ந்து காலை 7.45 மணிக்கு கொடிப்பட்டத்தை மேளதாளத்துடன் ரதவீதிகள் வழியே கொண்டுசென்றனர். 8.25 மணியளவில் கொடியேற்றம் நடந்தது. தெற்குமண் மடம் ஆதிஷேசன் நம்பூதிரி கொடியேற்றி வைத்தார். பின்னர் கொடிபீடத்திற்கு வட்டப்பள்ளிமடம் ஸ்தானிகர் டாக்டர் சர்மா சிறப்பு பூஜைகள் நடத்தினார். அதனைத்தொடர்ந்து தேர்களுக்கு கால்கோள்விழா நடந்தது.

கொடியேற்றுவிழா நிகழ்ச்சியில் குமரிமாவட்ட திருக்கோவில்கள் இணை ஆணையர் அன்புமணி, திருக்கோவில் பணியாளர்கள், பக்தர்சங்க நிர்வாகிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனி, சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை, தோல்பாவை கூத்து, பக்திநாடகம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. 2-ம் திருவிழாவான இன்று(புதன்கிழமை) முதல் 21-ந் தேதி வரை திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் சமய வளர்ச்சி மாநாடு மற்றும் தேவார பாடசாலை ஆண்டுவிழா நடக்கிறது.

வருகிற 25-ந் தேதி காலை 9.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இதில் அம்மன்தேர், பிள்ளையார் தேர், சப்பரத்தேர் ஆகிய மூன்று தேர்கள் உலா வருகின்றன. இரவு 11 மணிக்கு சப்தாவர்ண காட்சி நடக்கிறது.

திருவிழாவின் நிறைவு நாளான 26-ந் தேதி இரவு 8 மணிக்கு தெப்பத்திருவிழா நடக்கிறது. விழாவில் சுவாமியும், அம்பாளும், பெருமாளும் தெப்பத்தில் எழுந்தருளி மூன்று முறை தெப்பக்குளத்தை சுற்றி உலா வருவார்கள். நள்ளிரவு 12 மணிக்கு ஆறாட்டு விழா நடைபெறுகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்