சிக்கலை தீர்க்கும் சிங்கார வேலன்.. வேல் வாங்கும் போது முருகனுக்கு வியர்க்கும் அதிசயம் ?.
சிவனும் விஷ்ணுவும் ஒரே இடத்தில் அமைந்துள்ள அரிய தொன்மையான கோவில் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.
சென்னை –சிக்கல் சிங்கார வேலன் கோவிலின் சிறப்புகளையும் அதிசயங்களையும் இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் காணலாம்.
ஆலயம் அமைந்துள்ள இடம் ;
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் சிக்கல் என்ற இடத்தில் நவநீதி ஈஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு சிவபெருமான் நவநீதிஸ்வரராகவும், அம்பாள் வேல்நெடுங்கண்ணி ஆகவும் காட்சியளிக்கிறார்கள். நவநீதிஸ்வரர் வெண்ணெய் பிரான் என்றும் அழைக்கப்படுகிறது. முருகப்பெருமானுக்கு வேல் கொடுத்த நாயகி என்பதால் வேல் நெடுங்கண்ணி என்று அழைக்கப்படுகிறார் .இங்குள்ள முருகன் சிங்காரவேலன் என்று அழைக்கப்படுகிறார்.
ஆலயத்தின் சிறப்புகள் ;
சிவனும் விஷ்ணுவும் ஒரே இடத்தில் அமைந்துள்ள அரிய தொன்மையான கோவில் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இந்த திருத்தலம் அமைந்துள்ளது. சிக்கலில் முருகன் அன்னையிடம் வேலை பெற்று திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இது கந்த சஷ்டி விழாவின் பிரசித்தி பெற்ற விழாவாக கொண்டாடப்படுகிறது .முஸ்கந்த சக்கரவர்த்தி கட்டிய மாட கோவிலாகவும் அமையப் பெற்றுள்ளது. மிகவும் கலைநயமிக்க இந்த திருக்கோவிலின் விருட்சம் மல்லிகை ஆகும்..
ஆலயத்தின் வரலாறு;
முன்பொரு காலத்தில் இந்த பகுதி முழுவதும் மல்லிகை நிறைந்த காடாக இருந்தது. இதன் நடுவில் ஒரு குளமும் இருந்தது .அதன் கரையில் வசிஷ்டர் ஆசிரமம் அமைத்து அதில் வழிபாடுகளை செய்து வந்தார் .அந்த சமயத்தில் ஒரு கடுமையான பஞ்சம் நிலவியது. பூலோகத்தில் மட்டுமல்லாமல் தேவலோகத்திலும் உணவின்றி இருந்தனர். அப்போது காமதேனுக்கு மட்டும் கிடைத்த புலால் உணவை உண்டு விட்டது. இதனால் அதற்கு சாபமும் ஏற்பட்டது. இதற்கு சாப விமோசனம் கிடைக்க பூலோகம் வந்தது. அது வந்த இடம் தான் வசிஷ்டர் தவம் செய்த இடம். அங்குள்ள குளத்தில் நீராட சென்ற போது மடியில் இருந்த பால் முழுவதையும் குளத்திலே சுரந்து விடுகிறது. குளம் முழுவதும் பாலால் நிரம்பியது.
அதனால் இந்த குளம் பாற்குளம் என்று அழைக்கப்பட்டது . வசிஷ்டர் இதனை வெண்ணையாக திரட்டி சிவலிங்கமாக்கி வெண்ணை நாதராக வழிபடுகின்றார். வழிபாடு முடிந்து மற்றொரு இடத்திற்கு செல்லும்போது அந்த சுவாமியை நகர்த்த எண்ணுகிறார் .ஆனால் நகர்த்த முடியாத அளவிற்கு பல சிக்கல்கள் வருகிறது. அதனால் அந்த இடத்திற்கு சிக்கல் என்று பெயர் வந்தது.
வேலை போன்ற கண்களை உடையவள் என்பதால் வேல்நெடும்கண்ணி என்றும் அழைக்கப்படுகிறார் .முருகப்பெருமான் சூரனை சம்ஹாரம் செய்ய சென்றபோது சிவபெருமான் 11 உருத்திரர்களை அழைத்து முருகனின் 11 கரங்களில் வீற்றிருங்கள் எனக் கூறுகிறார் . ஆனால் முருகனின் கரங்களோ 12 உள்ளது. ஒரு கரம் மீதமிருக்க உடனே சிவபெருமான் தனது சக்திகளை திரட்டி ஒரு வேல் உற்பத்தி செய்தார். அதை பார்வதி தேவியிடம் கொடுக்க பராசக்தியோ அந்த வேலுக்கு தன் சக்தியை இணைத்து சக்திவேலாக மாற்றிக் கொடுக்கிறார் .
சூரசம்காரம் நிகழ்வின் போது பல முருகன் ஆலயத்திலும் வேல் வாங்கும் நிகழ்வு நடைபெறும். ஆனால் சிக்கலில் வேல் வாங்கும் போது முருகன் முத்துக்குமாரசுவாமி ஆக எழுந்தருளி வேலை பெறும்போது அந்த ஐம்பொன் திருமேனிக்கு முத்து முத்தாக வியற்கும் அற்புதமான காட்சியை இன்றும் காண முடியும் .இன்றைக்கும் இறைவன் அதில் எழுந்தருளி அருள் புரிகிறார் என்பதை சாட்சியாக உணர்த்தக்கூடிய சிங்காரவேலனின் அதிசயத்தை காண பல கண் கோடி வேண்டும்.
இங்குள்ள பெருமாள் வாமன அவதாரம் எடுத்து மகாபலியை வெல்ல வெண்ணை நாதரை வழிபட்டு விட்டு சென்றுள்ளார் என்ற வரலாறும் உள்ளது. நம்மில் பலருக்கும் இது முருகனின் ஆலயம் என்று தான் ..ஆனால் இது பலம்பெரும் சிவ வழிபாட்டிற்குரிய ஆலயமாக உள்ளது . முருகன் அதி விசேஷமாக இருப்பதால் பலரும் இது முருகப்பெருமானின் ஆலயம் என அறிந்திருக்க முடிகிறது.