முக்தி தரும் பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம்.. வியக்க வைக்கும் 5 அதிசயங்கள்..!

பல ஆயிரம் வருடங்கள் கடந்து மிகப் பழமையான ஆலயங்களில் ஒன்றுதான் பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயம் 2 ம் நூற்றாண்டில் கரிகால சோழனால் கட்டப்பட்டதாகும் .

perur pateeshwarar (1)

சென்னை –பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்தின் சிறப்புகளையும் அதன் ஐந்து அதிசயங்களையும் இந்த ஆன்மிக செய்தி குறிப்பில் காணலாம்.

ஆலயம் அமைத்துள்ள இடம் ;

பல ஆயிரம் வருடங்கள் கடந்து மிகப் பழமையான ஆலயங்களில் ஒன்றுதான் பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயம் 2 ம் நூற்றாண்டில் கரிகால சோழனால் கட்டப்பட்டதாகும் .மேலும் அருணகிரிநாதர் மற்றும்  கச்சப்ப முனிவரால் பாடப்பட்ட ஆலயமாகவும் திகழ்கிறது . இந்த ஆலயம் கோயம்புத்தூர் மாவட்டம் பட்டீஸ்வரம் என்ற இடத்தில அமைந்துள்ளது .  காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து ஒன்பது கிலோமீட்டர் தொலைவிலும் ,ரயில் நிலையத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவிலும் விமான நிலையத்திலிருந்து 19 கிலோமீட்டர் தொலைவிலும்  அமைந்துள்ளது.

தல வரலாறு;

தேவலோகத்தின் பசுவான காமதேனு பிரம்மாவைப் போல் தானும் படைக்கும் திறன் பெற  வேண்டும் என சிவனை நோக்கி தவம் புரிகிறது. தவம் புரிவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் தான் இந்த பட்டீஸ்வரம். ஒருமுறை காமதேனுவின் குட்டியான பட்டி துள்ளி குதித்து விளையாடும் போது லிங்கத்தின் மீது பட்டுவிட்டது. காமதேனு தான் குட்டி செய்த பாவத்தை மன்னிக்குமாறு மனம் வருந்தி வேண்டிக்கொள்கிறது.

அப்போது சிவபெருமான் காமதேனுக்கு காட்சி கொடுத்து கோபம் அடையாமல் மகிழ்ச்சியோடு இங்கு பட்டியின் கால் தடம் பட்டதால் இவ்வூர் பட்டீஸ்வரம் என விளங்கட்டும் .. காமதேனுபுரம் என்ற பெயரும் நிலைத்திருக்கும் என்ற வரத்தை கொடுத்து காமதேனுவை திருக்கருகாவூரில் தவம் செய்யுமாறு   கூறுகிறார். காமதேனு தன் குட்டியான பட்டியை அழைத்துக்கொண்டு திருக்கருகாவூர்  புறப்பட்டது. லிங்கத்தின் மீது இன்றும்  இந்த தழும்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இங்குள்ள அம்மன் பச்சை நாயகியாகவும் சிவபெருமான் பட்டீஸ்வரராகவும் காட்சியளிக்கிறார்கள்.

இந்த அற்புதமான தளத்தில் நடராஜர் ஆடியபடி இல்லாமல் ஆடி நிறைவு செய்த கோலத்தில் காட்சி தருகிறா.ர் திருவாதிரை திருநாள் இங்கு மிக விசேஷமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஊர்  மேலை  சிதம்பரம் என்றும் அழைக்கப்படுகிறது.

பேரூரின் ஐந்து அதிசயங்கள்;

1.இறவாபனை; பொதுவாக பனை மரத்தின் ஆயுட்காலம் நூறிலிருந்து 120 ஆண்டுகள் ஆகும் .ஆனால் இங்குள்ள பனைமரம் பல வருடங்களாக இளமையோடு இருப்பதாக கூறப்படுகிறது.இந்த பனைமரத்தை பற்றி கச்சப்ப முனிவர் பாடலும் பாடியுள்ளார் .

2.பிறவாபுளி;இங்குள்ள புளிய மரத்தின் கொட்டைகளை வேறு எந்த இடத்தில்  விதைத்தாலும் எத்தனை நாள் ஆனாலும் முளைக்காது என்று கூறப்படுகிறது.

3. இங்கு இறந்தவர்களின் காதை  மேல்நோக்கி வைக்கும் வழக்கம் உள்ளது. ஏனென்றால் காதில் சிவபெருமான் பஞ்சாட்சரம் ஓதி  அவர்களுக்கு முக்தியை அளிப்பார் என நம்பப்படுகிறது.

4. காமதேனு இங்கு வாழ்ந்ததால் ஆடு, மாடு போன்ற உயிரினங்களின் சாணம் புழு வைக்காது என்று கூறப்படுகிறது .அதைப்போல் ஆன்மாக்களின் உடலும் புழுக்காது  என்றும் கூறப்படுகிறது.

5. இறந்தவர்களின் எலும்பை இங்குள்ள நொய்யல் ஆற்றில் போட்டுவிட்டால் அது கல்லாக மாறும் என்ற அதிசயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த ஐந்து  அதிசயங்களும் உணர்த்தும் தத்துவங்கள் என்னவென்றால் இவ் ஊரில் இறப்பவர்களுக்கு மீண்டும் இறப்பு பிறப்பு இல்லாமல் முக்தி கிடைக்கும் என்று கூறப்படுகிறது . ஒரு மனிதன் பிறவா நிலையை அடைய இந்த பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம் உள்ளதாக   இன்றைக்கும் இந்த அதிசய சான்றுகள் உதாரணமாக விளங்குகின்றது. ஆகவே முக்தி பெற வேண்டுமெனில்  பேரூர் பட்டீஸ்வரரை சரணாகதி அடைவதன் மூலம் முக்தி அடையலாம் என்று கூறப்படுகிறது .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்