நவராத்திரி ஸ்பெஷல்.. நவராத்திரிக்கு தாம்பூலம் ஏன் கொடுக்க வேண்டும் தெரியுமா?
தாம்பூலத்தில் வைக்கக்கூடிய முக்கியமான பொருள்கள் மற்றும் அதன் பலன்களை இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
சென்னை –நவராத்திரி பூஜை கொண்டாடுபவர்கள் தாம்பூலம் கொடுப்பதும் வழக்கமாக இருக்கும். அந்த தாம்பூலத்தில் வைக்கக்கூடிய முக்கியமான பொருள்கள் மற்றும் அதன் பலன்களை இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தாம்பூலம் கொடுப்பது ஏன் ?
பூஜையின் போது மகாலட்சுமி தாயார் நம் வீட்டிற்கு யார் ரூபத்திலும் வருவார் என்பது ஐதீகம். அதனால்தான் வீட்டில் பூஜை செய்த பிறகு வீட்டிற்கு வந்திருக்கும் தோழர்களுக்கும் சுற்றத்தார்களுக்கும் தாம்பூலம் கொடுக்கும் வழக்கம் உள்ளது. வந்திருப்பவர்களை வெறும் கையோடு கட்டாயம் அனுப்பக்கூடாது.
தாம்பூலத்தில் வைக்க வேண்டிய பொருள்கள்;
கட்டாயம் ஒரே மாதிரியான தாம்பூலங்களை தான் அனைவருக்கும் கொடுக்க வேண்டும் இது மிக அவசியம். வீட்டில் வேலை செய்பவர்களுக்கு ஒரு மாதிரியும் உறவினர்களுக்கு ஒரு மாதிரியும் இருக்கக் கூடாது. ஏனெனில் மகாலட்சுமி நம் வீட்டிற்கு யார் ரூபத்திலும் வருவார் என்பதை மனதில் கொண்டு ஒரே மாதிரியான தாம்பூலங்களை தான் கொடுக்க வேண்டும்.
தாம்பூலத்தில் முதலில் வெற்றிலை பாக்கு வைக்க வேண்டும். வெற்றிலை பாக்கு சத்தியத்தின் ஸ்ருபமாகவும், மகாலட்சுமியின் அருளும் கிடைக்கச் செய்கிறது.
மஞ்சள் ,குங்குமம் ,தாலிக்கயிறு ,பூ ஆகியவற்றை தாம்பூலத்தில் வைக்க வேண்டும். இதனால் தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும். வீட்டில் மங்கலம் பெருகும்.
அடுத்ததாக பழம் வைக்க வேண்டும், அது வாழைப்பழமாக இருந்தாலும் கூட போதுமானது .பழம் கொடுப்பதால் அன்னதானம் கொடுத்த பலன் கிடைக்கும்.
தேங்காய் தாம்பூலத்தில் வைப்பதால் நம்முடைய பாவம் விலகும்.
ரவிக்கை துணி தாம்பூலத்தில் வைப்பதால் வஸ்திர தானம் கொடுத்த பலன் கிடைக்கும்.
கண்ணாடி வளையல் தாம்பூலத்தில் வைத்துக் கொடுத்தால் மன அமைதி கிடைக்கும்.
சீப்பு ,கண்ணாடி தாம்பூலத்தில் வைப்பதால் கணவரின் ஆயுள் அதிகரிக்கும்.
கண்மை வைத்து கொடுப்பதால் திருஷ்டி மற்றும் தோஷங்கள் நீங்கும். முடிந்தவர்கள் இவை அனைத்தும் வைத்து கொடுப்பது சிறந்தது.
முடியாதவர்கள் நீங்கள் கொடுக்கும் தாம்பூலத்தில் வெற்றிலை ,பாக்கு ,மஞ்சள் குங்குமம், தாலி, பூ இவை அனைத்தும் கட்டாயம் வைத்தாலே தாம்பூலம் பரிபூரணமாக நிறைந்து மகாலட்சுமியின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும். மேலும் கொலு வைக்காவிட்டாலும் இந்த தாம்பூலத்தை கொடுக்கலாம்.
தாம்பூலம் கொடுக்கும் முறை;
வீட்டிற்கு வந்த சுமங்கலி பெண்களை மணப்பலகையிலோ அல்லது நாற்காலிகிலோ உட்கார வைத்து அவர்களுக்கு சந்தனம் குங்குமம் வைத்து அவர்களின் முந்தானையில் தாம்பூலத்தை பெற்றுக் கொள்ளுமாறு கொடுக்க வேண்டும் .பிறகு அவர்களிடம் ஆசி பெற்றுக் கொள்ளலாம். உங்களைவிட வயதில் சிறியவராக இருந்தால் அவர்கள் உங்களிடம் ஆசி பெற்றுக் கொள்ளலாம்.
இதுபோல் நவராத்திரி பூஜைக்கு தாம்பூலம் கொடுப்பதின் பலன்களையும் முக்கியத்துவத்தையும் அறிந்து கொண்டு கொடுப்பது சிறந்ததாகும்.