நவராத்திரி ஸ்பெஷல்.. நவராத்திரி பூஜையில் வைக்கபடும் 9 வகை சாதங்கள் எது தெரியுமா ?
முதல் நாளில் அன்னை மகேஸ்வரியாக காட்சி அளிக்கிறார். அன்றைய தினம் அம்மனுக்கு மல்லிகைப்பூ மற்றும் வில்வம் கொண்டு அலங்கரித்து வெண்பொங்கல் ,வெள்ளை சுண்டல் நெய்வேத்தியமாக வைத்து வழிபட வேண்டும்.
சென்னை- நவராத்திரி அன்று அம்பிகைக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நெய்வேத்தியங்கள் படைக்கப்படுகிறது. அதைப்பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் தெரிந்து கொள்வோம்.
நவராத்திரி நாளில் அம்பிகையை பல்வேறு வடிவங்களில் வழிபடுவது வழக்கம். பெரும்பாலானோர் வீடுகளில் நவராத்திரி திருவிழா கொலு வைக்கப்பட்டு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த நாட்களில் அம்மனுக்கு விதவிதமான நெய்வேத்தியங்களும் படைக்கப்படுகிறது.
நெய்வேத்தியங்கள் படைக்கும் முறை ;
முதல் நாளில் அன்னை மகேஸ்வரியாக காட்சி அளிக்கிறார். அன்றைய தினம் அம்மனுக்கு மல்லிகைப்பூ மற்றும் வில்வம் கொண்டு அலங்கரித்து வெண்பொங்கல் ,வெள்ளை சுண்டல் நெய்வேத்தியமாக வைத்து வழிபட வேண்டும்.
இரண்டாம் நாள் அம்பிகை கௌமாரி ரூபத்தில் எழுந்தருளிகிறார் .அவருக்கு முல்லை மற்றும் துளசியால் அலங்கரித்து புளியோதரை ,பயித்தம் பருப்பு சுண்டலை நெய்வேத்தியமாக படைத்து வழிபட வேண்டும்.
மூன்றாம் நாள் தேவி வாராகியாக உருவெடுக்கிறார் .அவருக்கு செண்பகம் மலர் மற்றும் சம்பங்கி கொண்டு அலங்கரித்து சர்க்கரை பொங்கல் மற்றும் மொச்சை சுண்டலை நெய்வேத்தியமாக படைத்து வழிபட வேண்டும்.
நான்காம் நாள் அன்னை மகாலட்சுமி ஆக காட்சியளிக்கிறார். இவருக்கு மல்லிகை பூக்களால் அலங்கரித்து கதம்ப சாதம் மற்றும் பச்சை பட்டாணியை நெய் வைத்தியமாக படைக்க வேண்டும்.
ஐந்தாம் நாள் அம்பிகை வைஷ்ணவியாக உருவெடுக்கிறார். அவருக்கு முல்லை பூவால் அலங்கரித்து தயிர் சாதம் ,வேர்க்கடலை நெய்வேத்தியமாக வைத்து வழிபட வேண்டும்.
ஆறாம் நாள் அன்னை இந்திராணியாக காட்சியளிக்கிறார் .தேவிக்கு செம்பருத்திப்பூ கொண்டு அலங்கரித்து தேங்காய் சாதம் ,கடலைப்பருப்பு சுண்டலாக நெய்வேத்தியமாக வைத்து வழிபட வேண்டும்.
ஏழாம் நாள் அம்பிகை சரஸ்வதியாக அவதாரம் எடுக்கிறார். இவருக்கு மல்லிகை பூ சாற்றி எலுமிச்சை சாதம், வெள்ளை பட்டாணி நெய்வேத்தியமாக படைத்து வழிபட வேண்டும்.
எட்டாம் நாள் அம்பாள் துர்கா தேவியாக உருவெடுக்கிறார். அம்பாளுக்கு ரோஜா பூக்கள் சாற்றி பாயாசம், காராமணி சுண்டல் நெய்வேத்தியமாக படைத்து வணங்க வேண்டும்.
ஒன்பதாவது நாள் சாமுண்டியாக அன்னை உருவெடுக்கிறார். அவருக்கு தாமரை மலர்கள் சாற்றி அக்காரவடிசல் மற்றும் கொண்டக்கடலையை நெய்வேத்தியமாக வைத்து வழிபட வேண்டும் .மறுநாள் விஜயதசமி அன்று புட்டு மற்றும் காராமணி வைத்து வழிபட வேண்டும்.
நெய்வேத்தியங்களுடன் சுண்டல் வைத்து வழிபட்டால் நவகிரகங்களை சாந்தி படுத்தி அவற்றின் நன்மையை பெற்றுக்கொள்ளலாம். நவராத்திரி காலத்தில் வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு தாம்பூலம் கொடுத்து வழி அனுப்பி வைக்க வேண்டும். ஏனெனில் அம்பிகை நம்மை ஆசீர்வதிக்க யார் ரூபத்திலும் தேடி வருவார் என்றும் கூறப்படுகிறது.
ஒரு மனிதனுக்கு வீரம், செல்வம் ,ஞானம் இவை மூன்றும் இருந்தால் மட்டுமே வாழ்வில் அவரால் வெற்றி பெற முடியும். இந்த நவராத்திரி வழிபாடு செய்வதன் மூலம் இவற்றைப் பெறுவதோடு அம்பிகையின் பரிபூரண அருளையும் பெறலாம் .