கந்த சஷ்டி விரதம் 2024- வீட்டிலேயே கந்த சஷ்டி விரதம் கடை பிடிப்பது எப்படி?.
கந்த சஷ்டி விரதம் இருப்பது என்பது உணவு சாப்பிடுவதும் பட்டினி கிடப்பதும் இல்லை முருகன் மீது முழு நம்பிக்கையுடன் தீராத பக்தியை வைப்பதாகும்.
சென்னை –கந்த சஷ்டி விரதம் மேற்கொள்ள கடைபிடிக்கப்படும் விரதங்கள் பற்றியும் வீட்டிலேயே கடைபிடிப்பது எப்படி என்பதைப் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
கந்த சஷ்டி விரதம் ;
“எந்த வினையானாலும் கந்தனருள் இருந்தால் வந்த வினை ஓடும்” என்பது ஆன்றோர்களின் வாக்கு.. முருகப்பெருமானுக்கு எத்தனையோ விரதங்கள் இருந்தாலும் மிகவும் சக்தி வாய்ந்ததாக கூறப்படுவது ஐப்பசி மாதம் வரும் கந்த சஷ்டி விரதம் தான். வாழ்க்கையில் எப்பேர்ப்பட்ட பிரச்சனை இருந்தாலும் அதிலிருந்து விடுபட நினைப்பவர்கள் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். குறிப்பாக குழந்தை வரம் வேண்டும் என இருப்பவர்கள் சஷ்டி விரதத்தை மேற்கொண்டால் கந்தனே குழந்தையாக பிறப்பார் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
கந்த சஷ்டி விரதம் என்பது உணவையும் உறக்கத்தையும் தவிர்த்து தனித்திருந்து செய்யும் தவமே கந்த சஷ்டி விரதம் ஆகும். மேலும் கந்த சஷ்டி விரதம் இருப்பது என்பது உணவு சாப்பிடுவதும் பட்டினி கிடப்பதும் இல்லை முருகன் மீது முழு நம்பிக்கையுடன் தீராத பக்தியை வைப்பதாகும்.
விரதத்தின் வகைகள்;
தண்ணீர் விரதம்;இந்த விரதத்தில் நாள் முழுவதும் தண்ணீர் மட்டுமே குடித்து விரதம் இருக்கும் முறையாக மேற்கொள்ளப்படுகிறது.
பால் விரதம்;பெரும்பாலானோர் இருப்பது பால் விரதம் தான் இதில் காலையும் மாலையும் பால் மட்டுமே குடித்து விரதம் மேற்கொள்ளும் முறை ஆகும்.
திரவ விரதம்;இந்த விரதத்தில் பால், தண்ணீர் ,பழச்சாறு உள்ளிட்ட திரவ உணவுகளை எடுத்துக்கொண்டு 6 நாட்களும் கடைப்பிடிக்கும் முறையாகும்.
பால் பழ விரதம்;பாலுடன் பழங்களையும் சேர்த்து எடுத்துக் கொள்ளும் விரதம் முறையாகும்.
மிளகு விரதம்;விரதத்தை மிக மிக கடுமையாக கடைப்பிடிப்பவர்கள் இந்த மிளகு விரதத்தை மேற்கொள்வார்கள். முதல் நாள் ஒரு மிளகும், இரண்டாம் நாள் இரண்டும் மிளகும் , மூன்றாம் நாள் மூன்று மிளகும் , நான்காம் நாள் 4 மிளகும், ஐந்தாம் நாள் 5 மிளகும், ஆறாம் நாள் ஆறு மிளகும் சாப்பிட்டு தண்ணீர் குடித்து மேற்கொள்ளும் கடுமையான விரதமாகும்.
இளநீர் விரதம்;இளநீர் மற்றும் தண்ணீர் மட்டுமே ஆறு நாட்கள் குடித்து விரதம் மேற்கொள்ளும் முறையாகும்.
வீட்டிலேயே விரதம் இருக்கும் முறை;
காலையில் துயில் எழுந்து காலைக்கடனை முடித்து குளித்துவிட்டு குலதெய்வ வழிபாடு மற்றும் விநாயகரை வழிபட்டு முருகப்பெருமானின் திரு உருவப் படத்திற்கு பூக்கள் அலங்காரம் செய்து பூஜை செய்ய வேண்டும் .வேல் இருந்தால் வேல் வழிபாடும் செய்து கொள்ளலாம். மேலும் காலை மாலை இரு வேலையும் அருகாமையில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று வரவேண்டும். முடியாதவர்கள் முருகப்பெருமானின் 108 போற்றி, கந்த சஷ்டி கவசம் போன்ற முருகப்பெருமானின் திருநாமங்களையும் பாடல்களையும் படித்து வர வேண்டும்.விரதம் மேற்கொள்வதற்கு முன் அவரவர் உடல் நிலை ஏற்ப கடைப்பிடித்துக் கொள்ள வேண்டும்.
நம்முடைய வினைகளின் பலனால் தான் துன்பங்களை அனுபவிக்கின்றோம். வினைகள் குறைய குறைய துன்பத்தின் சுவடு மறைந்து இன்பமாக மாறும். கந்த சஷ்டி விரதம் இருப்பதினால் வினைகள் குறைந்து வாழ்க்கை முழுமை பெறும் .முழுமை பெறும் போது அதன் முழுமையான பலனை அனுபவிக்க முடியும் . உதாரணமாக நாம் ஒரு வேண்டுதலை இறைவன் முன் வைக்கிறோம் என்றால் அது நிச்சயம் நிறைவேறும். ஆனால் அது நமக்கு கிடைக்கும் காலம் நம்முடைய வினைகளை பொறுத்துதான் அமையும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.