மடத்தின் பாரம்பரிய ஐதீக முறைப்படி ஜெயேந்திரரின் உடல் அடக்கம்!
இன்று காஞ்சி சங்கர மடத்தின் 69வது மடாதிபதியான ஜெயேந்திரரின் உடல் அடக்கம் மடத்தின் பாரம்பரிய ஐதீக முறைப்படி நடைபெற்றது.
83 வயதான ஜெயேந்திரர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மூச்சு திணறல் ஏற்பட்டு நேற்று மரணமடைந்தார். இந்நிலையில் அவரது உடல் காஞ்சி மடத்தில் பக்தர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் ஜெயேந்திரருக்கு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அமர்ந்த நிலையில் வைக்கப்பட்டிருந்த ஜெயேந்திரர் உடல் கூடத்திற்கு கொண்டுவரப்ப்பட்டு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஜெயேந்திரர் உடலுக்கு தங்கத்தால் செய்யப்படும் சொர்ணாபிஷேகம் உள்ளிட்ட அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு ஆராதணைகள் செய்யப்பட்டன. பின்னர் ‘மகா பெரியவர்’ என அழைக்கப் படும், சந்திர சேகர சுவாமிகள் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடமான, சங்கர மடத்தின், ‘பிருந்தாவனம்’ அருகிலேயே, ஜெயேந்திரர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
உடல் கெடாமல் இருப்பதற்காக உப்பு, வசம்பு உள்ளிட்டவை வைக்கப்பட்டிருந்த குழிக்குள் ஜெயேந்திரர் உடல் இறக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.