சபரிமலை பெயர் மீண்டும் ஸ்ரீதர்மசாஸ்தா கோயிலானது! திருவிதாங்கூர் தேவசம் போர்டில் தீர்மானம்…..
கேரளா மாநிலத்தில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு மீண்டும் பழைய பெயர் சூட்டப்பட்டது.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மீண்டும் பழைய பெயரே சூட்டப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் கூறினார். சபரிமலை ஐயப்பன் கோயில் ‘ஸ்ரீதர்மசாஸ்தா கோயில்’ என்று தான் பல ஆண்டுகளாக அழைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின்போது அப்போதைய திருவிதாங்கூர் தேவசம்போர்டு, சபரிமலை கோயிலின் பெயரை ‘சபரிமலை ஸ்ரீஐயப்ப சுவாமி கோயில்’ என மாற்றியது.
இதுகுறித்து அப்போதைய திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், உலகிலுள்ள அனைத்து தர்மசாஸ்தா கோயில்களிலும் இளம்பெண்கள் தரிசனம் செய்யலாம். ஆனால் ஐயப்ப சுவாமி கோயில் சபரிமலையில் மட்டும் தான் உள்ளது. சபரிமலை கோயிலில் ஐயப்பன் நித்ய பிரம்மச்சாரியாக உள்ளார். அதனால் தான் சபரிமலை ஐயப்பன் கோயிலில் இளம்பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்று கூறினார்.
இந்நிலையில் தற்போதைய மார்க்சிஸ்ட் தலைமையிலான அரசில் அண்மையில் புதிதாக பொறுப்பேற்ற திருவிதாங்கூர் தேவசம் போர்டு, சபரிமலை கோயிலின் பெயரை மீண்டும் ‘சபரிமலை தர்மசாஸ்தா கோயில்’ என மாற்ற தீர்மானித்தது. நேற்று நடந்த திருவிதாங்கூர் தேவசம் போர்டு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
source: dinasuvadu.com