அம்மை நோய் வந்தால் பராமரிக்கும் முறை ..!என்ன செய்யக்கூடாது.?
அம்மை நோய் வந்தால் வீட்டில் செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததையும் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்வோம்.
சென்னை :அம்மை நோய் வந்தால் வீட்டில் செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததையும் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்வோம்.
அம்மை நோய் என்றால் என்ன ?
அம்மை நோயை பலரும் வாழ்வில் ஒரு முறையாவது அனுபவித்திருப்போம். இந்த அம்மையில் பல்வேறு வகை உள்ளது .சின்னம்மை, பெரியம்மை ,தட்டம்மை, பொண்ணுக்கு வீங்கி என கூறிக் கொண்டே செல்லலாம் .இது ஒரு வைரஸ் காரணமாக நம் உடலில் ஏற்படும் நோய் தொற்று என அறிவியல் கூறுகின்றது. மேலும் அதீதமான உடல் சூடு காரணமாகவும் ஏற்படுகிறது.
கிராமப்புறங்களில் இன்றும் இதற்காக தனி பராமரிப்புகள் மேற்கொள்கின்றனர். இந்த அம்மை எளிதில் மற்றவர்களுக்கு பரவக்கூடியது. அதனால் பாதிக்கப்பட்டவரை தனிமைப்படுத்தி வைப்பது அவசியம் மேலும் இதற்கென தடுப்பூசிகளும் உள்ளது என்பதால் முந்தைய காலகட்டத்தை விட தற்போது குறைந்து விட்டது எனலாம்.
பராமரிக்கும் முறை ;
பாதிக்கப்பட்டவர்களை வீட்டில் தனிமைப்படுத்தி வைக்க வேண்டும் . வீட்டின் முன் வேப்பிலையை வைக்க வேண்டும். இது ஒரு அடையாளத்திற்காக மட்டுமே.. வெளி ஆட்கள் உள்ளே வரக்கூடாது என்பதை குறிப்பிடுவதாகும். மேலும் வாசலில் ஒரு பாத்திரத்தில் மஞ்சள் கலந்த நீரை வைத்து விட வேண்டும். வீட்டை விட்டு சென்று மீண்டும் வீடு திரும்பும் போது இதில் காலை கழுவி விட்டு உள்ளே நுழைய வேண்டும் என்பதற்காக.வேப்பிலை மற்றும் மஞ்சள் சிறந்த கிருமி நாசினியாகும் .
பாதிக்கப்பட்டவர்களை ஒரு வெள்ளை துணி விரித்து அதன் மீது வேப்பிலைகளை பரப்பி அதன் மீது ஒரு வெள்ளை துணி விரித்து பிறகுதான் படுக்க வைக்க வேண்டும் . அதற்கு வாய்ப்பில்லாதவர்கள் பருத்தியில் ஆன துணி , போர்வை போன்றவற்றையும் பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த வேப்பிலைகளை கீழே ஆங்காங்கே சிதறவிடாமல் 24 மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.
பயன்படுத்தப்பட்ட வேப்பிலைகளை ஒரு சாக்கு துணியில் கட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு தண்ணீர் ஊற்றும் போது அதனை கால் படாத இடத்தில் கொட்டி விட வேண்டும்.. ஒரு சில கொப்புளம் போன்ற அம்மைகள் அரிப்பை ஏற்படுத்தும் என்பதால் அதனை எக்காரணத்தை கொண்டும் சொரிந்து விடக்கூடாது அதற்கு பதிலாக காலை மாலை என இரு வேலைகளில் இளநீரில் துணியை நனைத்து லேசாக துடைத்துக் கொள்ள வேண்டும். இந்த அம்மை இருக்கும் நாட்களில் கட்டாயம் குளிக்க கூடாது.
உணவு முறை;
அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீராகாரம் மற்றும் குளிர்ச்சியான உணவுகளான கம்பங்கூழ் ,இளநீர் ,வாழைப்பழம் போன்றவற்றை உணவாக கொடுக்க வேண்டும் .உப்பு, காரம், புளிப்பு ,தாளிப்பு போன்றவற்றை தவிர்த்து கொள்வது நல்லது . பாதிப்பு குறைவாக இருப்பவர்களுக்கு அவர்கள் ஆசைப்பட்டதை உண்ண கொடுக்கலாம் . முதல் நாள் அம்மை வந்த பிறகு மாரியம்மன் கோவிலுக்கு சென்று தீர்த்தம் வாங்கி கொடுக்க வேண்டும். வாய்ப்பு இல்லாதவர்கள் வீட்டிலேயே மஞ்சள் கலந்த தண்ணீரை அம்மனை நினைத்து வேண்டிக்கொண்டு அதனை பருகக் கொடுக்க வேண்டும்.
இந்த அம்மை ஏழு நாட்கள் 9 நாட்கள் என ஒவ்வொருவருக்கும் இறங்குவதற்கு நாட்கள் எடுத்துக் கொள்ளும். தண்ணீர் ஊற்றும் பொழுது சுடு தண்ணீராக இருக்கக் கூடாது. கட்டாயம் சூரியன் இறங்கும் பொழுதில் தான் தண்ணீர் ஊற்ற வேண்டும். மூன்று மணிக்கு மேல் சுத்தமான தண்ணீரில் வேப்பிலை கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு மஞ்சள் மற்றும் வேப்பிலையை அரைத்து உச்சந்தலை , அம்மை தழும்பு உள்ள இடத்தில் பூசி தண்ணீர் ஊற்ற வேண்டும்.
என்ன செய்ய கூடாது ?
முதல் தண்ணீர் ஊற்றுவது செவ்வாய், வெள்ளி ,ஞாயிறு போன்ற கிழமைகளாக இருக்கக் கூடாது. பிறகு இரண்டாம் தண்ணீர் ஒரு நாள் விட்டு ஊற்ற வேண்டும் . அடுத்து ஒரு நாள் விட்டு மூன்றாம் தண்ணீர் ஊற்றி விட வேண்டும். இந்த மூன்று தண்ணீர் ஊற்றும் வரை சோப்பு, சீயக்காய், ஷாம்பு போன்றவற்றை கட்டாயம் பயன்படுத்தக் கூடாது.மேலும் கண்ணாடி பார்ப்பது ,சீப்பு பயன்படுத்துவது ,ப்ரஷ்வைத்து பல் விலக்குதல் கூடாது . மூன்றாவது தண்ணீர் ஊற்றிய பிறகு மாரியம்மனுக்கு படையல் போட வேண்டும்.
இளநீர் வைத்து ஒரு சொம்பு தண்ணீரில் மஞ்சள், எலுமிச்சை சேர்த்து அதன் மீது வேப்பங்கொத்துகள் மற்றும் மல்லிகைப்பூ வைத்து கலசம் தயார் செய்து கொள்ள வேண்டும் .பிறகு ஒரு வாழை இலையில் பச்சரிசியால் செய்த வெள்ளை சாதம் வைத்து அதன் மீது தயிர் சேர்த்து பல்லயமாக செய்து கொள்ளவும். அந்தப் பல்லயத்தின் மீது கட்டி வெல்லம் மூன்று துண்டுகள், மூன்று துண்டுகள் வாழைப்பழம் வைக்க வேண்டும். பிறகு துள்ளு மாவு இடித்து வைத்துக் மாரியம்மனை உள் அன்போடு பிரார்த்தனை செய்து வழிபாடு செய்ய வேண்டும்.
பிறகு அருகில் இருக்கும் மாரியம்மன் கோவிலுக்கு சென்று பாலபிஷேகம் அல்லது இளநீர் அபிஷேகம் செய்து வரவேண்டும் .இதுவே அம்மை போட்டவரை பராமரிக்கும் முறையாகும். இது தூய்மையின் அடிப்படையாக பெரியோர்கள் கற்றுக் கொடுத்த வழிமுறையாக கூறப்படுகிறது. ஒவ்வொரு ஊர்களிலும் இதற்கு மாறுபாடுகள் இருக்கலாம். மேலும் அம்மை நோய்க்கு ஏற்ப இதில் மாறுதல்களுக்கும் உட்பட்டது.மேலும் ஒரு சில அம்மைகள் மூளை நரம்புகளை பாதிக்கும் அளவுக்கு தீவரமாகவும் இருக்கும் ,அந்த சமயத்தில் மருத்துவரை அணுக வேண்டும் .