குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலின் வரலாறும்.. சிறப்புகளும்..
குலசை மக்களின் குலதெய்வமாகவே முத்தாரம்மன் திகழ்கிறார். முத்தாரம்மனை நம்பியவர்களின் வாழ்க்கை முத்து போல் எப்போதும் பிரகாசமாக இருக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது.
தூத்துக்குடி –குலசை முத்தாரம்மன் கோவில் சிறப்புகள், அம்மன் எழுந்தருளிய வரலாறு மற்றும் பக்தர்களின் வழிபாடுகள் பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.
ஆலயம் அமைந்துள்ள இடம் ;
திருச்செந்தூரில் இருந்து கன்னியாகுமரி சாலையில் சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது குலசேகரபட்டினம் நகரம். இது முற்காலத்தில் வியாபார தலமாக விளங்கியது என பல வரலாற்று கதைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு எழுந்தருளி இருக்கும் அம்மன் தான் முத்தாரம்மன். இங்குள்ள சிவபெருமான் ஞான மூர்த்தீஸ்வரர் என்ற திருப்பெயருடன் அழைக்கப்படுகிறார். முத்தை ஆற வைக்கும் அம்மன் என்பதால் முத்தாரம்மன் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார்.முத்தாக உடலில் ஏற்படும் அம்மை நோயை குணப்படுத்தும் அம்மன் என்றதால் இந்த சிறப்பு பெயரை பெற்றுள்ளார். சாதாரணமாக இருந்த கோவில் உலகப் பிரசித்தி பெற்ற ஆலயமாக திகழ்கிறது என்றால் அது அம்மனின் சக்திதான்.
ஆலயத்தின் வரலாறு ;
அம்மன் மகிஷாசுரனை வதம் செய்த பிறகு ஏற்பட்ட பிரம்மகத்தி தோஷத்தை நீக்க சிவபெருமானை நோக்கி தவம் செய்கிறார் .அப்போது அங்கு சிவபெருமான் காட்சி கொடுத்து என்ன வரவேண்டும் என கேட்கிறார் ,அதற்கு அம்மன் நீங்கள் எனது அருகிலேயே எப்போதும் வீற்றிருந்து என்னை வழிபடும் பக்தர்களுக்கும் உங்களுடைய அருளை கொடுக்க வேண்டும் என வேண்டி கேட்க சுவாமியும் அதற்கு இணங்கிறார். இங்கு சிவபெருமான் லிங்க வடிவத்தில் இல்லாமல் திருவுருவம் கொண்டு இருப்பது இந்த ஆலயத்தின் தனி சிறப்பாக விளங்குகின்றது.
மேலும் இங்கு உள்ள முத்தாரம்மன் சுயம்புவாக உருவாகியவள். ஒருமுறை நாகர்கோவில் அருகில் மயிலாடி என்ற கிராமத்தில் ஒரு பக்தரின் கனவில் தோன்றி தனக்கு இந்த உருவம் தான் வேண்டும் எனக் கூறி தன்னைத்தானே வடிவமைத்து கொண்டவள்.
ஆலயத்தின் வழிபாடு ;
மைசூரில் எந்த அளவுக்கு தசரா விமர்சையாக கொண்டாடப்படுகிறது அதேபோல் தமிழகத்தில் தசரா என்றால் அது குலசை முத்தாரம்மன் கோவில் தான். பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியனுக்கு முத்தாரம்மன் காட்சி கொடுத்ததால் குலசேகரன் பட்டினம் என்ற பெயர் வந்தது எனவும் கூறப்படுகிறது.இங்கு கடல் கடந்து வந்து முத்தாரம்மனை வழிபடும் பக்தர்கள் ஏராளம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு ஆண்டும் தசரா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. திருச்செந்தூரில் சூரசம்காரம் காண எந்த அளவிற்கு பக்தர்கள் கூட்டம் காணப்படுமோ அதே அளவுக்கு குலசை கடற்கரையில் அம்மன் மகிஷாசுரனை வதம் செய்வதை காண லட்ச கணக்கில் மக்கள் திரண்டு வருகின்றனர். இந்த தசராவுக்கு பக்தர்கள் 48 நாட்கள் விரதம் மேற்கொண்டு வேடமிட்டு வழிபடுவது பிரசித்தி பெற்ற வழிபாடாக கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக காளி வேடம் மிகச் சிறப்பாக கூறப்படுகிறது.
மேலும் மடியேந்தி காணிக்கை பெரும் வழிபாடும் சிறப்பாக கூறப்படுகிறது. இந்த வழிபாடு மூலம் நான் என்ற அகந்தை நீங்குகிறது என்றும் கூறப்படுகிறது. இந்தத் திருவிழாவின் பத்தாம் நாள் குலசை கடற்கரையில் மகிஷாசுரனை அம்மன் வதம் செய்கிறாள். அதைத்தொடர்ந்து பதினோராவது நாள் காப்பு கலைந்து கொடி இறக்கம் செய்யப்படுகிறது. பிறகு பன்னிரண்டாம் நாள் பால் அபிஷேகம் செய்து அம்மன் குளிர்விக்கப்படுகிறார்.
இங்கு கொடுக்கப்படும் பிரசாதம் திருமஞ்சன பிரசாதம் ஆகும். இது இந்த ஆலயத்தின் சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது. புற்று மண்ணில் எண்ணெய் மற்றும் மஞ்சள் சேர்த்து இரவில் அம்மனுக்கு சாற்றி மறுநாள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது தீராத நோயை நீக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது. தசரா மட்டுமல்லாமல் ஞாயிறு ,செவ்வாய், வெள்ளி போன்ற நாட்களிலும் அம்மன் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள் புரிகிறார். குலசை மக்களின் குலதெய்வமாகவே முத்தாரம்மன் திகழ்கிறார். முத்தாரம்மனை நம்பியவர்களின் வாழ்க்கை முத்து போல் எப்போதும் பிரகாசமாக இருக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது.