விநாயகர் சதுர்த்தி உணர்த்தும் தத்துவங்களும்.. அறிவியல் காரணங்களும்..!
விநாயகர் மண் பஞ்சபூதத்தின் தன்மையை கொண்டவர். அதனால்தான் விநாயகர் வழிபாட்டிற்கு மண் பிள்ளையார் வழிபாடு சிறப்பாக கூறப்படுகிறது.
சென்னை – இந்து பண்டிகைகளில் மிக விமர்சையாக கொண்டாடப்படும் விழாக்களில் விநாயகர் சதுர்த்தியும் ஒன்று, விநாயகர் சதுர்த்தி உணர்த்தும் தத்துவத்தையும் அதன் அறிவியல் காரணங்களையும் இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
விநாயகர் சதுர்த்தி உணர்த்தும் தத்துவம்;
தங்கத்திலேயே விநாயகர் சிலை இருந்தாலும் விநாயகர் சதுர்த்தி அன்று களிமண்ணால் ஆன சிலையை வாங்கி வீட்டில் பூஜை செய்து மூன்றாம் நாள் நீரில் கரைப்பது மிகச் சிறந்தது என ஆன்மீகத்தில் கூறப்படுகிறது. வழிபாடுகளிலேயே மிகவும் எளிமையான வழிபாடு விநாயகர் வழிபாடு தான் .வாசலில் இருக்கும் களிமண்ணில் விநாயகரை பிடித்து வீட்டுக்கு அருகிலேயே இருக்கும் அருகம்புல்லையும் எருக்கம் பூ மாலையையும் சாத்தி எளிதாக வழிபடக்கூடிய வழிபாடாகும்.
இவ்வுலகமும் உடலும் பஞ்சபூதங்களால் ஆனது தான் .அதேபோல் ஒவ்வொரு தெய்வமும் பஞ்சபூதத்தின் தன்மையை கொண்டுள்ளது. அந்த வகையில் விநாயகர் மண் பஞ்சபூதத்தின் தன்மையை கொண்டவர். அதனால்தான் விநாயகர் வழிபாட்டிற்கு மண் பிள்ளையார் வழிபாடு சிறப்பாக கூறப்படுகிறது.
இப்படி மண்ணால் செய்யப்பட்டு விழாவாக கொண்டாடப்பட்டு பிறகு ஆற்றில் கரைக்க படுவது உற்பத்தி செய்யப்பட்ட இடத்திற்கே சேர்வதை குறிக்கிறது .அதாவது” தொடக்கம் எதுவோ முடிவும் அதுவே ” என்பதே இதன் தத்துவமாக கூறப்படுகிறது. ஒவ்வொரு உயிர்களும் எங்கிருந்து வந்ததோ அங்கேயே சேர்வதையே விநாயகர் சதுர்த்தி உணர்த்திச் செல்கிறது .
அறிவியல் காரணங்கள்;
ஆடி மாதம் பெய்த மழையாலும் , அணைக்கட்டுகளில் இருந்து அதிக நீர் திறந்து விடுவதாலும் ஆற்றில் வெள்ளம் கரை புரண்டோடும். அவ்வாறு வெள்ளத்தின் போது ஆற்றில் உள்ள மண்களும் சேர்த்து எடுத்துச் செல்லும் . பிறகு வரும் நீரானது ஆற்றில் தங்காமல் கடலிலே கலந்துவிடும் . இதை தடுப்பதற்காக நம் முன்னோர்கள் ஆடி முடிந்து ஆவணி மாதம் வரக்கூடிய சதுர்த்தியில் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடினார்கள்.
இந்நிலையில் விநாயகரை களிமண்ணில் செய்து வழிபட்டு பிறகு ஆற்றில் கரைத்து விடுவதன் மூலம் ஆற்றில் ஏற்பட்ட மண் அரிப்பு சீர் செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல் அப்பகுதியில் நிலத்தடி நீர் குறைவதும் தடுக்கப்படுகிறது. தற்போது நாம் விநாயகரை வீட்டிலேயும் அருகில் இருக்கும் குளத்திலேயும் கரைத்து விடும் பழக்கமும் உள்ளது. ஆனால் ஆற்றில் கரைப்பது தான் சரியான முறையாகும்.
மேலும் சாயம் பூசப்பட்ட விநாயகரை நீரில் கரைக்கும்போது அந்த நீரும் அசுத்தம் ஆகிறது. ஆகவே இந்த பண்டிகையின் தாத்பரியத்தை தெரிந்து கொண்டு களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகரை ஆற்றில் கரைப்பது சிறந்த முறையாகும்.