ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் திருவிழா
ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய கோவிலாகும். இந்த நகரில் சின்ன மாரியம்மன் ,வாய்க்கால் மாரியம்மன் ,கொங்கலம்மன் கோவில் கருங்கல் பாளையம் சின்ன மாரியம்மன் ,சூரம் பட்டிவலசு மாரியம்மன் என் ஏராளமான மாரியம்மன் கோயில்கள் உள்ளன.எல்லாவற்றுக்கும் தலைவியாக பெரிய மாரியம்மன் அருள் பாலிக்கிறார்.
வழிபாடு :
கோவிலின் முற்பகுதியில் சிங்கவாகனமும் ,தூரியும் அழகுற விளங்குகிறது.வேப்ப மரத்தை தலவிருட்சமாக இந்த கோவில் கொண்டுள்ளது.இங்கு பரசுராமர் சிற்பம் அமைக்கபட்டுள்ளது. இக்கோவிலில் காலை 7 மணிக்கு காலசந்து பூஜை ,மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை இரவு 7.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடக்கிறது.
திருவிழா :
பூச்சாட்டுதல் தொடங்கி கம்பத்தை எடுத்து வாய்க்காலில் விடுவது வரை பெரியமாரியம்மன் கோவில் ,சின்ன மாரியம்மன் கோவில் வாய்க்கால் மாரியம்மன் கோவில்களில் விழா இணைந்தே நடந்து வருகிறது. பெரியமாரியம்மன் திருவிழா என்பது ஈரோடு நகரத்தின் மிகப்பெரிய திருவிழாவாகும். இந்த திருவிழாவில் ஜாதி,மதம்,இன வேறுபாடின்றி ஈரோட்டில் வாழ்கிற அனைத்து மக்களும் பங்கு கொள்கின்ற திருவிழாவாகும்.
மக்கள் குழுக்களாக கூடி இசைநிகழ்ச்சிகள்,நாடகங்கள், பட்டிமன்றங்கள்,கவியரங்கம்,கருத்தரங்கம்,பொம்மலாட்டம் ஆகிய நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.மாரியம்மன் வகையறா கோவில்களின் குண்டம்- தேர்த்திருவிழா கடந்த 18-ந்தேதி இரவு பூச்சாட்டுடன் தொடங்கி நடந்து வருகிறது.
விழாவை முன்னிட்டு நேற்று மாலை 5 மணிக்கு திருவிழா கொடியேற்றப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டார்கள்.திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் 3 கோவில்களிலும் வைக்கப்பட்டுள்ள கம்பங்களுக்கு பெண்கள் மற்றும் பக்தர்கள் தொடர்ந்து புனிதநீர் ஊற்றி வழிபாடு செய்கிறார்கள்.
அதனை தொடர்ந்து வரும் ஏப்ரல் 2-ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் குண்டம் இறங்கும் விழா நடக்கிறது.இந்த விழாவின் போது பக்தர்கள் தீ மிதித்து நேர்த்தி கடனை செலுத்துவார்கள்.மாவிளக்கும் கரகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் மற்றும் பெரிய மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடக்க இருக்கிறது.