ஏகாதசி 2024- ஏகாதசி விரதம் மேற்கொள்ளும் முறைகளும் அதன் பலன்களும்..!
சென்னை -திதிகளில் பதினோராவது திதியாக வருவது ஏகாதேசியாகும். பெருமாளுக்கு மிகவும் உகந்த திதியாக கூறப்படுகிறது. விரதங்களில் ஏகாதசி மிக சிறப்பு வாய்ந்தது என்றும் கூறப்படுகிறது.மனிதர்களாகிய பிறந்த நாம் அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டும் என்றால் முக்தி கிடைக்க வேண்டும் .அந்த முக்தியை அடைவது அவ்வளவு எளிதல்ல, அப்படி முக்தி கிடைக்க பின்பற்றப்படும் விரதங்களில் ஏகாதசி மிக உயர்ந்ததாக கருதப்படுகிறது.
ஒரு வருடத்தில் 24 முறை ஏகாதசி வருகிறது .அந்த 24 ஏகாதசி விரதங்களையும் ஒரு மனிதன் கடைப்பிடித்தால் அவர் நிச்சயம் வைகுண்டத்தை அடைவார் என நம்பப்படுகிறது. அதிலும் குறிப்பாக சயன ஏகாதசி, பரிவர்த்தனை ஏகாதசி, உத்தான ஏகாதசி, ஸ்ரீ வைகுந்த ஏகாதசி இந்த நான்கு ஏகாதசிகளும் வைணவத்தில் சிறப்பாக கூறப்படுகிறது. 24 ஏகாதசிகளை பின்பற்ற முடியாதவர்கள் இந்த நான்கையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என கூறப்படுகிறது .
ஏகாதசி பிறந்த வரலாறு ;
விஷ்ணு பகவான் ,மனிதர்கள் பூமியில் வாழும் போது தெரிந்தும் தெரியாமலும் செய்யும் பாவங்களுக்கு தண்டனையை ஏற்படுத்தி அதற்கென எமலோகத்தையும் சிருஷ்டித்து எம ராஜனையும் நியமித்தார். அப்படி ஒரு முறை நாராயணன் அங்கு சென்று இருந்தார் அப்போது இறந்த பின் மனிதர்கள் படும் அவஸ்தையை கண்டு மனம் இறங்கி ஏகாதசி விரதத்தை பற்ற கூறினார். ஏகாதசி விரதத்தை வாழும் போதே எவர் செய்து வருகிறார்களோ அவர்கள் பிறவிப் பயன் நீங்கி வைகுண்டம் சேர்வார்கள் என உறுதியும் அளித்தார் .
ஏகாதசிக்கு அறிவியல் காரணங்களும் கூறப்படுகிறது. ஏகாதசி தினத்தில் பூமி ,சந்திரன், சூரியன் ஆகியவை முக்கோண நிலையில் வரும். அந்த நாளில் சந்திரன் ஈர்ப்பு பூமியின் மீது அதிகமாக இருக்கும். அந்த ஈர்ப்பு சக்தியால் மனிதனின் ஜீரண உறுப்பு சீரான நிலையில் இருக்காது. அதனால் அன்று விரதம் மேற்கொள்ள வேண்டும் என்று பெரியோர்கள் ஆன்மீகத்துடன் இணைத்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. மேலும் ஏகாதசி அன்று தியானம் செய்பவர்களுக்கு சந்திரனின் ஆற்றல் அதிகமாக கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
விரதம் மேற்கொள்ளும் முறை;
ஏகாதசி விரதத்தை தசமியில் துவங்கி துவாதசியில் முடிக்க வேண்டும். அதாவது தசமியில் ஒருவேளை மட்டும் உணவு உண்டு பிறகு ஏகாதசி என்று முழு நாள் விரதம் இருந்து துவாதசி அன்று காலையில் குளித்து சுவாமிக்கு நெய்வேத்யம் வைத்து பூஜை செய்து பிறகு விரதத்தை முடித்து கொள்ள வேண்டும்.
இந்த மாதத்தில் தேய்பிறை ஏகாதசி ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி வியாழக்கிழமை ஆவணி 13ஆம் தேதி வருகின்றது. மேலும் விரத நாட்களில் தண்ணீரில் துளசி இலைகளை சேர்த்து குடித்துக் கொள்ளலாம். துளசி இலைகளை ஏகாதசி அன்று பறிக்கக் கூடாது. அதனால் அதற்கு முந்தைய தினமே பறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
ஏகாதசி விரதத்தின் பலன்கள்;
ஏகாதசியில் விரதம் இருந்தால் பாவம் நீங்கும். அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். முப்பத்து முக்கோடி கோடி தேவர்களும் போற்றும் விரதம் ஏகாதசிதான். மனக்குழப்பம் தீரும், புத்தி தெளிவு கிடைக்கும், ஏகாதசி நாளில் பழங்கள் தானம் கொடுத்தால் இல்லற வாழ்க்கை சிறக்கும்.
பசியே தாங்காத பீமன் கூட ஏகாதசி விரதத்தை பின்பற்றினார் என புராண கதைகள் கூறுகின்றது. அதனால் ஸ்ரீ நாராயணனின் அன்பையும் அருளையும் பெற்று மனித வாழ்க்கையை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் முக்தியை பெற ஏகாதசி விரதத்தை பின்பற்ற முயல்வோம்.