ஐப்பசி மாதத்தில் துலாஸ்நானம் ஏன் செய்ய வேண்டும் தெரியுமா?
துலா ஸ்நானம் என்றால் என்ன, அதன் பலன்கள் மற்றும் ஐப்பசி மாதத்தின் சிறப்புகளை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் காணலாம் .
சென்னை –துலா ஸ்நானம் என்றால் என்ன, அதன் பலன்கள் மற்றும் ஐப்பசி மாதத்தின் சிறப்புகளை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் காணலாம் .
துலாஸ்நானம் என்றால் என்ன ?
தமிழ் மாதத்தில் ஏழாவது மாதமாக வரக்கூடியது தான் ஐப்பசி மாதம். ஐப்பசி மாதத்தில் சூரிய பகவான் துலாம் ராசியில் சஞ்சரிக்கின்றார், அதனால் துலா மாதம் என்றும் அழைக்கப்படுகிறது .இந்த மாதத்தில் பண்டிகைகள் மற்றும் விரதங்கள் வரக்கூடிய மாதமாகவும் விளங்குகின்றது . குறிப்பாக முருகப்பெருமானுக்கு உரிய மகா கந்த சஷ்டி விரதம் வருகின்ற மாதமாகவும் உள்ளது. மேலும் அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடும் தீப ஒளி திருநாளும் இந்த மாதத்தில் வருகின்றது . பரம்பொருள் சிவபெருமானின் திருமேனிக்கு அன்னாபிஷேகம் நடைபெறும் மாதமாகவும், கேதார கௌரி விரதம் வரும் மாதமாகவும் விளங்குகின்றது.
அது மட்டுமல்லாமல் சுக்கிரவார விரதம் இருக்க உகந்த மாதமாகவும் திகழ்கிறது. தன திரியோதசி திதியும் ,எம துவிதியை திதியும் , இந்திர ஏகாதசி திதியும் வரும் புனிதமான மாதமாகவும் உள்ளது . மேலும் உலகில் உள்ள அனைத்து நதிகளும் தீர்த்தங்களும் காவிரியில் கலக்கும் மாதமாகவும் விளங்குகின்றது, அதனால் தான் இந்த ஐப்பசி மாதத்தில் துலாஸ்நானம், முடவன் முழுக்கு என்ற இரண்டு புனித செயல்களை கடைப்பிடிக்கின்றனர். இது குறிப்பாக திருச்சி ,தஞ்சாவூர் போன்ற கடலோர டெல்டா மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற நிகழ்வாக உள்ளது. இந்த துலாஸ்நானம் ஐப்பசி மாதம் துவங்கி கார்த்திகை ஒன்றாம் நாளுக்குள் காவிரியில் நீராடுவதே துலாஸ்நானமாக கூறப்படுகிறது.
துலாஸ்நானம் செய்வதன் பலன்கள்;
துலாஸ்நானம் செய்வதால் தீராத நோய் தீரும், குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும், அறியாமல் செய்த பாவங்கள் நீங்கும் ,பல வாய்ப்புகள் தேடி வரும் ,வறுமை ஒழியும் என பல பலன்களை பெற்றுத்தருவதாக நம்ப படுகிறது .
உலக உயிர்கள் அனைத்தும் கங்கையில் நீராடி தனது பாவங்களை தீர்த்துக் கொள்கின்றது. ஆனால் கங்கை தன்னுடைய பாவத்தை தீர்ப்பதற்காக பல நிகழ்வுகளை செய்கின்றது .அதில் ஒன்றுதான் ஐப்பசி மாதம் கங்கை காவிரியில் கலக்கும் நிகழ்வாகும்.
முடவன் முழுக்கு;
முடவன் முழுக்கு என்பதற்கு ஒரு புராண கதையும் கூறப்படுகிறது. முன்பொரு காலத்தில் ஒரு முடவன் காவிரி நதியில் நீராடுவதற்காக ஐப்பசி மாதத்தில் தனது ஊரிலிருந்து நடக்க துவங்குகிறார் ஆனால் அவர் காவிரியை சென்றடையும்போது ஐப்பசி முடிந்து கார்த்திகை முதல் நாள் பிறந்து விட்டது .மனம் வருந்திய முடவன் இறைவனை நோக்கி வருந்தி பிரார்த்தனை செய்கின்றார் அப்போது இறைவன் உனது உடல் பாரத்தை தாங்கிக் கொண்டு மிகவும் சிரமப்பட்டு வந்திருக்கும் உனக்காக இந்த கார்த்திகை முதல் நாள் காவிரியில் நீராடினாலும் துலாஸ்நானம் செய்த பலன் கிடைக்கும் என்று அருள்பாளிக்கின்றார். இதுவே முடவன் முழுக்கு என காவிரி கரையோர டெல்டா மாவட்டத்தினர் கூறுகின்றனர்.
இந்த துலாஸ்நானம் 18- 10- 2024 அன்று துவங்கி 16- 11- 2024 வரை உள்ளது. இந்த நாட்களில் ஏதேனும் ஒரு நாள் காவிரியில் நீராடி துலாஸ்நானம் செய்து வந்தால் அதன் புண்ணிய பலன்களை பெற முடியும் என நம்ப படுகிறது .