ஆடி பதினெட்டாம் பெருக்கு ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா?
Devotion -ஆடி மாதத்தின் சிறப்புகளையும் அதன் வரலாறு பற்றியும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஆடிப்பெருக்கு;
பெருக்கு என்றால் பெருகுவது என்று பொருள். ஆடி மாதத்தில் தான் தென்மேற்கு பருவமழை துவங்கி காவிரியில் நீர் பெருக்கெடுத்து ஓடும். விவசாயம் செழிக்கும். இப்படி தங்கள் வாழ்வை வளப்படுத்தும் காவிரியை கரையோரங்களில் உள்ள மக்கள் சிறப்பிப்பதற்காகவும் நன்றி செலுத்துவதற்காகவும் துவங்கப்பட்ட விழா ஆடி பதினெட்டாம் பெருக்கு ஆகும்.
தமிழக முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு முக்கிய விழாவாக உள்ளது. உழவர்கள் இந்நாளில் பட்டம் பார்த்து விதை விதைப்பார்கள். அதனால்தான் ஆடி பட்டம் தேடி விதை என்ற சொல்லும் உள்ளது . இந்நாளில் ஆறுகளில் நீராடி பூஜை செய்து விவசாய வேலையை துவங்குவார்கள். இதற்கு புராண கதையும் கூறப்படுகிறது.
ஆடிப்பெருக்கும் அதன் வரலாறும்..
சுர்வதமன் என்ற அரக்கன் தன்னுடைய கடுமையான தவத்தால் சிவபெருமானை மகிழ்வித்தார் .அதனால் மூலம் என்றும் வெற்றியடையும் வரத்தை பெற்றிருந்தார். இதனால் தன்னுடைய கட்டுப்பாட்டில் இந்த உலகையை கொண்டு வர வேண்டும் என மக்களை ஆட்டி படைத்தார். தேவர்களையும் சிறையில் அடைத்தார். சுர்வதமனிடம் சிக்காமல் இந்திரன் மற்றும் வருணன் தப்பிச் சென்றனர்.
ஆனால் வர்ணனையும் அரக்கன் பிடித்து விட்டார் .உன்னை சிறையில் அடைக்க வேண்டாம் என்றால் நீ தென் பகுதியில் மழை பொழிய கூடாது என்று கூறினார். அதற்கு வர்ணனும் ஒப்புக்கொண்டார். இதன் விளைவாக தென்பகுதியில் நீரின்றி பாலைவனமாக மாறியது இதனைப் பார்த்த அகத்தியர் பிரம்மனை நோக்கி தவம் புரிந்தார் .
பிரம்மன் சிவனிடம் வேண்டுமாறு கேட்டுக்கொண்டார். அகத்தியரின் வேண்டுதலுக்கு இணங்கி சிவபெருமானோ தன்னுடைய தலையில் இருந்த கங்கையின் ஒரு பகுதியை முனிவருக்கு கொடுத்தார். அகத்தியர் தன்னுடைய கமண்டலத்தில் அந்த நீரை அடக்கி தென்பகுதிக்கு வருகிறார். தென்பகுதியைக் காண விநாயகரும் அவரை பின் தொடருகிறார்.
சோர்வால் அகத்தியர் கமண்டலத்தை ஒரு இடத்தில் வைத்துவிட்டு சோகத்தில் அமர்ந்திருக்கிறார். தென்பகுதி உடனடியாக செழிப்பாக வேண்டும் என எண்ணி விநாயகர் காகம் உருவெடுத்து கமண்டலத்தில் உள்ள நீரை தட்டி விடுகிறார் இதைப் பார்த்து அதிர்ந்த முனிவர் காகத்திற்கு சாபமிட போகிறார் .அப்போது சுய உருவத்தில் விநாயகர் காட்சி தருகிறார். இவ்வாறு விநாயகர் காகமாக மாறி நீரை விரித்ததால் காவிரி என அகத்திய பெயர் சூட்டினார்.
ஆடிப்பெருக்கு நாளானது ஆன்மீகம் மட்டுமல்லாமல் நன்றி கடன் செலுத்துவதற்கும் உரிய நாளாக உள்ளது. இந்நாளில் பெண்கள் தாலி கயிறு மற்றும் தாலி சரடு மாற்றி கொள்ளலாம். இந்த நாளில் பெண்கள் ஆற்றில் நீராடி ஆற்றங்கரை ஓரம் காவிரித் தாயை மனதில் வைத்து, பூ பழம், தேங்காய், மஞ்சள் ,காப்பரசி போன்ற மங்களப் பொருட்களை சமர்ப்பித்து வழிபாடு செய்து தாலி சரடு மாற்றிக் கொள்வது வழக்கம்.
அவ்வாறு மாற்றிய பிறகு மூன்று அல்லது ஐந்து சுமங்கலி பெண்களுக்கு மங்களப் பொருட்களை தானமாக கொடுக்க வேண்டும். இதன் மூலம் காவிரி தாயின் ஆசியினை பெற்று திருமணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்றும் திருமணம் ஆனவர்களின் கணவர்களின் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.
ஆடிப்பெருக்கு அன்று எந்த ஒரு செயலை செய்தாலும் காவிரி நீர் போல் பெருக்கெடுத்து பொங்கி வரும். தொட்டது பல மடங்கு பெருகும். எனவே இந்தப் புண்ணிய காலத்தில் பூமித்தாயையும் காவிரியையும் வழிபாடு செய்வது மிகச் சிறப்பாகும்.