புரட்டாசியில் சுப நிகழ்ச்சிகள் ஏன் செய்ய கூடாது தெரியுமா ?
இறை வழிபாட்டிற்கு என்றே சில மாதங்களை நம் முன்னோர்கள் ஒதுக்கி வைத்துள்ளார்கள். அவற்றில் ஆடி ,புரட்டாசி ,மார்கழி போன்ற மாதங்கள் உள்ளது.
சென்னை –புரட்டாசி துவங்கி விட்டாலே பலருக்கும் பல சந்தேகம் தோன்றும் அதில் சுப நிகழ்ச்சிகள் செய்யலாமா என்றும் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்றெல்லாம் தோன்றும் அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்வோம்.
இறை வழிபாட்டிற்கு என்றே சில மாதங்களை நம் முன்னோர்கள் ஒதுக்கி வைத்துள்ளார்கள். அவற்றில் ஆடி ,புரட்டாசி ,மார்கழி போன்ற மாதங்கள் உள்ளது. புரட்டாசி இறை வழிபாட்டிற்கு உரிய மாதமாக திகழ்கிறது. குறிப்பாக புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாட்டிற்கு உகந்த நாளாகவும் கூறப்படுகிறது.
சூரியன் கன்னி ராசியில் பிரவேசிக்கும் மாதமாகவும் ,தென்திசை நோக்கி சூரியன் பயணத்தை தொடங்குவார் என்றும் கூறப்படுகிறது. இந்த புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு சனிக்கிழமை விரதம் இருந்து வழிபாடு செய்தால் சனியால் ஏற்படும் தோஷம் அகலும் என்றும் நம்பப்படுகிறது.
சுப நிகழ்ச்சிகள் செய்யலாமா?
காது குத்துதல், மொட்டை அடித்தல், வளகாப்பு செய்தல் போன்றவற்றை செய்யலாம் . மேலும் விஜயதசமி அன்று கலைகளை துவங்க உகந்த நாளாகவும் கூறப்படுகிறது. அன்றைய நாளில் புதிய தொழில் துவங்கவும் சிறந்த நாளாக கூறப்படுகிறது.
ஆனால் திருமணம் இந்த மாதத்தில் செய்வதை தவிர்க்க வேண்டும் .ஏனென்றால் புரட்டாசி மாதம் முதல் பதினைந்து நாட்கள்மகாலய பட்ச காலம் எனக் கூறப்படுகிறது .அதாவது பித்ருலோகத்தில் இருந்து நம் முன்னோர்கள் பூலோகத்திற்கு வந்து நாம் செய்யக்கூடிய வழிபாடுகளை ஏற்றுக்கொண்டு மீண்டும் தங்கள் உலகத்திற்கு செல்லும் காலமாகும்.
இவ்வாறு பித்ரு காரியங்கள் செய்யும் நாட்களில் திருமணம் செய்யக்கூடாது. அதற்கு அடுத்த 15 நாட்கள் நவராத்திரி ஆரம்பம் ஆகிவிடும். இப்படி 15 நாட்கள் முன்னோர்களுக்கும் 15 நாட்கள் அம்பாள் வழிபாட்டிற்கும் சென்று விடுவதால் இந்த மாதம் திருமணம் செய்ய உகந்த நாளாக கூறப்படவில்லை. வழிபாட்டிற்கே ஒதுக்கப்பட்ட மாதமாக புரட்டாசி மாதம் விளங்குகின்றது.
மேலும் இந்த மாதத்தில் கிரகப்பிரவேசம், புதிதாக கட்டிட வேலைகளை துவங்குவது போன்றவற்றையும் செய்வதை தவிர்க்க வேண்டும், ஏனெனில் இந்த மாதம் வாஸ்துவிற்கு உரிய மாதம் அல்ல. மேலும் இந்த மாதம் முழுவதும் அசைவ உணவை தவிர்க்க வேண்டும்.ஏனென்றால் பருவநிலை மாற்றத்தால் செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும் என்று அறிவியல் காரணம் உள்ளது.