வைகுண்ட ஏகாதசி எப்போது தெரியுமா ?.
இந்த வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பதால் அஸ்வமேத யாகம் செய்த பலனையும் பெற்று தருகிறது .மேலும் முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கப்படும் விரதமாகவும் இது உள்ளது.
வைகுண்ட ஏகாதசி விரதத்தின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி எப்பொழுது வருகிறது என்பதை பற்றி பார்க்கலாம்.
சென்னை;’ காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரம் இல்லை’ ‘தாய்க்கு சமமான தெய்வமும் இல்லை ”காசிக்கு நிகரான தீர்த்தமும் இல்லை ”ஏகாதசிக்கு சமமான விரதமும் இல்லை’ என்பது பெரியோர்களின் வாக்கு . ஏகாதசி விரதம் மற்ற விரதங்களை காட்டிலும் மிகச் சிறந்த விரதம் ஆகும். உண்ணா நோன்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து அனுஷ்டிக்கப்படும் விரதமாக கூர்ம புராணம் குறிப்பிடுகின்றது.
ஏகாதசி அன்று இரவும் பகலும் விரதம் இருந்து மகாவிஷ்ணுவை துதிப்போருக்கு இந்த பிறவியில் நோயற்ற வாழ்வு, நல்ல குழந்தைகள் கிடைக்கும். பாவம் மன்னிக்கப்பட்டு சொர்க்கத்திற்கு செல்வார்கள் என்பது ஐதீகமாக உள்ளது .மேலும் வருடம் முழுவதும் வரும் ஏகாதசி விரதத்தை பின்பற்றிய பலனை வைகுண்ட ஏகாதசி பெற்று தரும் என கூறப்படுகிறது. இந்த வைகுண்ட ஏகாதசி விரதம் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் அமாவாசை முடிந்த பதினோராவது நாள் வளர்பிறை ஏகாதசியில் கொண்டாடப்படுகிறது.
இந்த குரோதி வருடத்திற்கான ஏகாதசி மார்கழி 26 ம் தேதி [ ஜனவரி 10,2025]அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இந்நாளில் அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும். ஜனவரி 9- 2025 அன்று பிற்பகல் 12; 22 க்கு ஏகாதசி துவங்கி ஜனவரி 10 வெள்ளிக்கிழமை காலை 10; 19க்கு நிறைவடைகிறது.
விரதம் மேற்கொள்ளும் முறை;
இந்த வைகுண்ட ஏகாதசி விரதத்தை 9 வயது முதல் 79 வயது வரை உள்ளவர்கள் கடைப்பிடிக்கலாம் என்றும் 9 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் 80 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களும் இந்த விரதத்தை தேவையில்லை எனவும் சாஸ்திர நூல்கள் கூறுகின்றது. விரதத்தை அவரவர் உடல் நிலைக்கு ஏற்ப எடுத்துக் கொள்ளலாம் .ஆனால் ஏகாதசிக்கு முதல் நாள் ஒரு வேளை மட்டும் உணவருந்தி மறுநாள் முழு விரதத்தையும் மேற்கொண்டு அன்று இரவு தூங்காமல் கண் விழித்து பெருமாளுக்கு உகந்த ‘ஓம் நமோ நாராயண’ என்ற நாமத்தை உச்சரித்து நாராயண கவசம், விஷ்ணு புராணம் போன்றவற்றைப் படித்து சொர்க்கவாசல் திறப்பை காண்பது மிகச் சிறப்பாக கூறப்படுகிறது. மறுநாள் காலை துளசி தீர்த்தம் அருந்தி பலவித காய்களை சமைத்து விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.
சொர்க்கவாசல் திறப்பது ஏன்?
விஷ்ணு ஆலயங்களில் பொதுவாக வடக்கு திசை மூடப்பட்டு ஏகாதசி அன்று திறக்கப்படுகிறது. சொர்க்கவாசல் என அழைக்கப்படும் வாசல் வழியாகச் சென்று இறைவனை வழிபடலாம். இதற்கென ஒரு புராணக் கதையும் கூறப்பட்டுள்ளது. மகாவிஷ்ணுவுடன் போரிட்டு அவரின் அருளை பெற்ற மது கைடவர்கள் என்ற அரக்கர்கள் தான் பெற்ற வைகுண்ட இன்பத்தை உலகில் உள்ள அனைவரும் பெற வேண்டும் என விரும்பினார்கள் .
அதனால் விஷ்ணுவிடம் சென்று திருவரங்க வடக்கு வாசல் வழியாக நீங்கள் அச்சா அவதாரத்துடன் வெளிவரும் போது தங்களை தரிசிப்பவர்களுக்கும் பின் தொடருபவர்களுக்கும் அவர்கள் எத்தகைய பாவம் செய்திருந்தாலும் அவர்களுக்கு முக்தி அளிக்க வேண்டும் என வரம் கேட்டுக் கொண்டனர்.. பெருமாளும் வேண்டுதலை ஏற்றுக் கொண்டார் .அதன் காரணமாக அன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சுவாமி பவனி வரும் நிகழ்வு நடைபெறுகிறது.
இந்த வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பதால் அஸ்வமேத யாகம் செய்த பலனையும் பெற்று தருகிறது .மேலும் முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கப்படும் விரதமாகவும் இது உள்ளது. இந்நாளுக்கு வைகுண்ட முக்கோடி ஏகாதசி என்ற பெயரும் உண்டு .உள்ளத்தில் பக்தி உணர்வுகளையும், உடல் ஆரோக்கியத்தையும் இணைப்பதே விரதமாக சொல்லப்படுகிறது. ஆகவே இந்த விரதத்தை மேற்கொண்டு விஷ்ணுவின் பரிபூரண அருளை பெறுவோம் .