புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

பெருமாளை குலதெய்வமாகவும் ,இஷ்ட தெய்வமாகவும் வழிபடுபவர்கள் புரட்டாசி சனிக்கிழமையில் தளிகை இடுவார்கள் .தளிகை என்றால் படையல் என்பதாகும்.

thaligai (1)

சென்னை –தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.

புரட்டாசியில் சிறப்புகள் ;

தமிழ் மாதத்தில்   மிகவும் புண்ணிய பலன்களை தரக்கூடிய மாதங்களில் புரட்டாசிக்கு முக்கிய பங்கு உண்டு .புரட்டாசி பெருமாளுக்கு உரிய மாதமாக சொல்லப்பட்டாலும் சிவனுக்குரிய கேதார கௌரி விரதம் மற்றும் அம்பிகைக்கு உரிய நவராத்திரி பண்டிகை, முன்னோர்களுக்கான வழிபாடு போன்றவை கொண்டாடப்படுகிறது .புரட்டாசி மாதம் சனிக்கிழமையில் தான்  சனி பகவான் அவதரித்தார் எனவும் கூறப்படுகிறது. சனிக்கிழமையில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் வேண்டுதல் உடனடியாக நிறைவேறும் என்றும் நம்பப்படுகிறது.

தளிகை என்றால் என்ன?

பெருமாளை குலதெய்வமாகவும் ,இஷ்ட தெய்வமாகவும் வழிபடுபவர்கள் புரட்டாசி சனிக்கிழமையில் தளிகை இடுவார்கள் .தளிகை என்றால் படையல் என்பதாகும்.தளிகையில் பெருமாளுக்கு ஐந்து விதமான சாதங்கள் படைக்கப்படுகின்றது. தேங்காய் சாதம், தயிர் சாதம்,சர்க்கரை  பொங்கல் ,புளியோதரை போன்ற சாதங்களும், உளுந்துவடை ,சுண்டல் மற்றும் பானகம், துளசி தீர்த்தம் போன்றவை  தளிகையில் வைக்கப்படுகின்றது. ஐந்து விதமான சாதங்களை  பச்சரிசியில் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகவும் கூறப்படுகிறது.

தளிகை போடும் முறை;

வாழை  இலையில் ஐந்து விதமான சாதத்தால்   திருமாலின் திரு உருவ படத்தை வரைந்து தீப தூப ஆராதனை இட்டு கோவிந்தா என கோஷமிட்டு வழிபடுவதாகும். தளிகை போட முடியாதவர்கள் மாவிளக்கு வைத்து வழிபாடுகளை செய்யலாம். பெருமாளுக்கு தயிர் சாதம் மிகவும் பிடித்த உணவாக கூறப்படுகிறது. அதனால் தான் இன்றளவும் திருமலையில் ஏழுமலையானுக்கு மண்பானையில் தயிர் சாதம் நெய்வேத்தியமாக படைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தளிகை போடும் நாட்கள்;

இந்த ஆண்டு புரட்டாசியில் நான்கு சனிக்கிழமைகள் வருகின்றது. முதல் சனிக்கிழமை  செப்டம்பர் 21ஆம் தேதி மகாளய பட்சத்தில் மகா பரணியில் வருவது சிறப்பாக கருதப்படுகிறது. செப்டம்பர் 28ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமை வருகின்றது. இது ஏகாதசியுடன் சேர்ந்து வருவது மிக விசேஷமாக கூறப்படுகிறது. இந்த நாளில் துளசி பூஜை செய்வது மிகச் சிறப்பாகும்.

மூன்றாவது சனிக்கிழமை அக்டோபர் ஐந்தாம் தேதி வருகின்றது. நவராத்திரி காலத்தில் வருவதால் இன்றைய தினம் மகாலட்சுமி பூஜை செய்வது விசேஷமானதாகும். மேலும் திருதியை திதி வருவது கூடுதல் சிறப்பாகவும் கூறப்படுகிறது. நான்காவது சனிக்கிழமை அக்டோபர் 12ஆம் தேதி திருவோண நட்சத்திரத்தில் வருவதும் மிக விசேஷமானதாகும். மேலும் விஜயதசமியும் இணைந்து வருகின்றது.

இதில் நான்கு வாரங்களும் தளிகை இடுபவர்கள் பெருமாளுக்கு படைத்து வழிபடலாம். முடியாதவர்கள் இந்த சனிக்கிழமையில் உங்களுக்கு உகந்த நாளை தேர்வு செய்து அந்நாளில்  தளிகையிட்டு  கொள்ளலாம். இதுவும் முடியாதவர்கள் மாவிளக்கு வைத்தும் வழிபடலாம் ,நாம் வைக்கும் எந்த ஒரு நெய்வேத்தியத்தையும் உள் அன்போடு இறைவனுக்கு படைத்தாலே அவர் ஏற்றுக் கொள்வார். இந்த புரட்டாசியில் பல நல்ல நாட்கள் தொடர்ந்து வருவதால் வழிபாடுகளை முறையாக கடைப்பிடித்தால் அதற்கேற்ப  பலன்கள்  நம் வாழ்வில் பிரதிபலிக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்