திருவண்ணாமலை கார்த்திகை தீபம் ஏன் சிறப்பு வாய்ந்தது தெரியுமா?.
திருவாரூரில் பிறந்தால் முக்தி ,காசியில் இறந்தால் முக்தி ,காஞ்சியில் வாழ்ந்தால் முக்தி, தில்லையை தரிசித்தால் முத்தி என்பார்கள் ஆனால் திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி என்று கூறுகின்றார்கள்.
சென்னை :திருவண்ணாமலையின் சிறப்புகளும் திருக்கார்த்திகையின் சிறப்புகளையும் இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலய சிறப்புகள் ;
திருவண்ணாமலை பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக கூறப்படுகிறது. திருவாரூரில் பிறந்தால் முக்தி ,காசியில் இறந்தால் முக்தி ,காஞ்சியில் வாழ்ந்தால் முக்தி, தில்லையை தரிசித்தால் முத்தி என்பார்கள் ஆனால் திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி என்று கூறுகின்றார்கள். ஈசன் ஜோதியாக நின்ற ஸ்தலம் இதுவே. பிரம்மா மற்றும் திருமாலின் ஆணவம் அழிந்த இடமாகும் , ஈசன் அர்த்தநாரீஸ்வரராக காட்சி கொடுத்த ஸ்தலமாகும், மேலும் அருணகிரிநாதர் திருப்புகழைப் பாட முருகப்பெருமான் அடி எடுத்துக் கொடுத்த ஸ்தலமாகவும் விளங்குகிறது . பௌர்ணமி கிரிவலத்துக்கு பிரசித்தி பெற்ற ஸ்தலம் என்றும், கார்த்திகை தீபத்தின் மூலஸ்தலமாகவும் கூறப்படுகிறது.
பல இடங்களில் மலை மேல் கோவில் இருக்கும் ஆனால் திருவண்ணாமலை மலையே தெய்வமாக காட்சி தருகிறது. மலையே லிங்கமாகவும் ஜோதியே இறைவனாகவும் வழிபடப்படுகிறது. மேலும் இந்த மலை 260 ஆண்டுகோடி பழமையானது என்று பீர்பால் சஹானி என்ற ஆய்வாளர் கூறுகின்றார். பால் பிரிட்டன் என்ற ஆய்வாளர் [Message From Arunachala ] என்ற நூலை எழுதியுள்ளார். அதில் லெமூரியா கண்டத்தின் எஞ்சிய பகுதி தான் திருவண்ணாமலை என கூறியுள்ளார். அண்ணா என்றால் நெருங்க முடியாத என்று பொருளாகும். பிரம்மாவும் விஷ்ணுவும் நெருங்க முடியாத ஜோதி வடிவமாக இறைவன் நின்றதால் அண்ணாமலை என பெயர் வந்தது .
மேலும் அருணன் என்றால் சூரியன் அசலம் என்றால் உயரமுள்ள மலையாகும். உயரமுள்ள நெருப்பு மலையாகவும் காந்த மலை என்றும் கூறப்படுகிறது. ஏனென்றால் அண்ணாமலையாரை தரிசிக்க வருவோரை மீண்டும் மீண்டும் காந்தத்தைப் போல் ஈர்த்து வரவழைக்கும் என்று கூறப்படுகிறது .இந்த மலை 2688 அடி உயரம் உள்ளதாகும். இங்குள்ள லிங்கத்தின் அடிப்பாகம் பிரம்மா பாகம் என்றும் நடுவில் விஷ்ணு பாகம் ,மேல்பாகம் ருத்ரப்பாகமாகவும் கொண்டு ஈசன் லிங்கமாக காட்சி தருகிறார்.
திருவண்ணாமலை திருக்கார்த்திகை;
கார்த்திகை தீப விழா தான் உண்மையான தமிழர்களின் தீபாவளி என்று கூறப்படுகிறது. மாலை 5;58 மணிக்கு அர்த்தநாரீஸ்வரர் திருவண்ணாமலையில் காட்சி தந்த இரண்டு நிமிடம் கழித்து திருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இந்த மகா தீபம் கண்ட பின் தான் அனைவரது வீடுகளிலும் திருக்கார்த்திகை விளக்கு ஏற்றப்படுகிறது.
ஏழு அடி உயரமுள்ள செப்பு கொப்பரையில் தான் மகாதீபம் ஏற்றப்படுகிறது. 3000 கிலோ பசு நெய்யில் , ஆயிரம் மீட்டர் காடா துணி திரி கொண்டு ,இரண்டு கிலோ கற்பூரம் இட்டு தீபம் ஏற்றுவார்கள். இந்த உரிமை மீனவ குல பரத்வாஜ் குலத்தினர் தான் செய்து வருகின்றனர். இந்த தீபம் 11 நாட்கள் எரியும் என்றும் பத்து கிலோமீட்டர் தூரம் வரை தெரியும் என்றும் கூறப்படுகிறது. கண்ணுக்குத் தெரிந்த கடவுளாக பார்க்கப்படுவது சூரியன், அந்த சூரியனை தெரியப்படுத்துவது அது வெளிப்படுத்தும் நெருப்பும் ஒளியும்.. அந்த ஒளிக்கு கடவுளாக இருக்கும் அண்ணாமலை நாதரை வழிபடுவது என்பது வழிபாடு மட்டுமல்ல நம் முன்னோர்களின் செயல்பாடு ஆகும்.