தீபாவளி எண்ணெய் குளியல்- எண்ணெய் காய்ச்சும் முறை மற்றும் பலன்கள்..!
தீபாவளி அன்று கட்டாயம் ஏன் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் மற்றும் எண்ணெய் காய்ச்சும் போது சேர்க்க வேண்டிய முக்கிய பொருள்கள் அதன் பலன்களைப் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
சென்னை –தீபாவளி அன்று கட்டாயம் ஏன் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் மற்றும் எண்ணெய் காய்ச்சும் போது சேர்க்க வேண்டிய முக்கிய பொருள்கள் அதன் பலன்களைப் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிப்பது நம் பாரம்பரிய முறையாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் ஒரு சிலர் எண்ணையை காய்ச்சாமல் அப்படியே தேய்த்து குளிப்பார்கள் அவ்வாறு செய்வதை காட்டிலும் நல்லெண்ணையை காய்ச்சி அதனுடன் சில பொருட்களை சேர்த்து பயன்படுத்த வேண்டும்.
தீபாவளி எண்ணெய் காய்ச்சும் முறை;
நல்லெண்ணெய் எடுத்து மிதமான தீயில் சூடாக்கி அதில் நான்கு மிளகு, சீரகம் அரை ஸ்பூன், இஞ்சி ஒரு இன்ச் அளவு இடித்து சேர்த்து அதனுடன் இரண்டு பள்ளு பூண்டு தட்டி சேர்த்து பொன்னிறமாக வந்ததும் இறக்கி ஆற வைத்துக் கொள்ளவும். எண்ணெயில் சேர்த்த பொருட்கள் கருகி விடக்கூடாது. இப்பொழுது எண்ணெய் கை பொறுக்கும் சூட்டிற்கு வந்தவுடன் வடித்து வைத்துக் கொள்ளவும். மற்றொரு கிண்ணத்தில் சீயக்காயம் கலந்து வைத்துக் கொள்ளவும் .
தீபாவளி எண்ணெய் குளியல் (கங்காஸ்நானம்)செய்யும் முறை:
வீட்டில் இருக்கும் பெரியவர்கள் எண்ணெயை காய்ச்சி தயார் செய்து வைத்துவிட்டு மற்றொரு கிண்ணத்தில் சீயக்காயம் கலந்து இரண்டையும் பூஜை அறையில் வைத்து பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். ‘வீட்டில் இருக்கும் அனைவருக்கும் தேக ஆரோக்கியமும் மன ஆரோக்கியமும் மகாலட்சுமியின் சகல அனுக்கிரகமும் கிடைத்து நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும்’ என பிரார்த்தனை செய்து பிறகு அந்த எண்ணெய் மற்றும் சீயக்காயை தேய்ப்பதற்கு முன்பு பூமாதேவியை நினைத்துக் கொண்டு எண்ணெய்யை மூன்று சொட்டும் சீயக்காய் மூன்று சொட்டும் தரையில் இட்டு பிரார்த்தனை செய்து நீங்கள் எண்ணெய் தேய்பவர்களுக்கு கீழிருந்து மேலாக தேய்த்து விட வேண்டும்.
சுவாச கோளாறு உள்ளவர்கள் லேசாக தலையில் வைத்துவிட்டு உடனே குளித்து விட வேண்டும். மற்றவர்கள் அரை மணி நேரமாவது ஊறவைத்து பிறகு சீயக்காய் தேய்த்து சுடு தண்ணீரில் குளிக்க வேண்டும். இந்த கங்கா ஸ்நானத்தை அதிகாலை 3 லிருந்து 5 மணிக்குள் செய்துவிட வேண்டும்.
கங்கா ஸ்நானம் செய்வதன் பலன்கள்;
அதிகாலையில் எண்ணெய் தேய்த்து குளிப்பதால் அன்று சுடு தண்ணீரில் கங்கா தேவி வாசம் செய்கிறார் என்றும் நல்லெண்ணையில் மகாலட்சுமி இருப்பதாகவும் சீயக்காயில் சரஸ்வதி தேவி இருப்பதாகவும் அன்று சாப்பிடும் இனிப்பில் அமிர்தம் வாசம் செய்கின்றது என்றும் புத்தாடையில் மகாவிஷ்ணு இருப்பதாகவும் சந்தனத்தில் பூமாதேவியும், குங்குமத்தில் கௌரி மாதாவும் ,மலர்களில் யோகிகளும் ,தீபாவளி லேகியத்தில் தன்வந்திரி பகவானும் ,நெருப்பு பொரியில் ஜீவ ஆத்மாக்களும் வாசம் செய்கின்றனர் என்று சாஸ்திரம் கூறுகின்றது . அதனால் தான் தீபாவளி அன்று பட்டாசு கொளுத்துகிறோம். ஆகவே இந்த குறிப்பிட்ட நேரத்தில் முறைப்படி கங்காஸ்நானம் எடுத்துக் கொள்வதால் கங்கை நதியில் குளித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். தெரியாமல் செய்த பாவங்கள் விலகும் என்றும் நம்பப்படுகிறது.