தீபாவளி 2024- தீபாவளி அன்று ஏன் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் தெரியுமா ?
தமிழகம் மற்றும் தென்னிந்தியாவில் சதுர்த்தசி திதியும் அம்மாவாசை திதியும் சேர்ந்து வரும் நாளில் தீபாவளி கடைபிடிக்கப்படுகிறது.
சென்னை –தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிக்கும் நேரம் மற்றும் தீபாவளியின் சிறப்புகளை பற்றி இந்த செய்தித் தொகுப்பில் தெரிந்து கொள்வோம் .
தீபாவளி 2024;
ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் வரும் அமாவாசை திதியில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் [ஐப்பசி மாதம் 14]அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. சில சமயங்களில் தீபாவளி பண்டிகை அமாவாசை அன்றும் சில சமயங்களில் அமாவாசைக்கு முதல் நாளும் வரும். அந்த வகையில் இந்த ஆண்டு அம்மாவாசை திதி அக்டோபர் 31ஆம் தேதி மாலை 4; 29 மணிக்கு தொடங்கி நவம்பர் 1ஆம் தேதி மாலை 6:25 வரை உள்ளது .
தீபாவளி சிறப்புகள் ;
அனைத்து மக்களும் மகிழ்ச்சியாக புத்தாடைகள் அணிந்து பட்டாசு வெடித்து விதவிதமான பலகாரங்கள் சமைத்து கொண்டாடக் கூடிய திருநாள் என்றால் அது தீபாவளி பண்டிகை தான். இந்த நாளில் தான் நரகாசுரன் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே கிருஷ்ண பரமாத்மாவிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்நாள் அனுசரிக்கப்படுகிறது .அதாவது கிருஷ்ண பரமாத்மா நரகாசுரனை வதம் செய்ததை கொண்டாடும் விதமாக தீபாவளி பண்டிகை கூறப்படுகிறது. நரகாசுரனை சதுர்த்தசி என்பார்கள். இதன் காரணமாக வட இந்தியாவில் சதுர்த்தசி அன்று தீபாவளி கடைபிடிக்கப்படுகிறது.
அதாவது அமாவாசை திதிக்கு முன்பு வரும் நாள் சதுர்த்தசி திதியாகும். ஆனால் தமிழகம் மற்றும் தென்னிந்தியாவில் சதுர்த்தசி திதியும் அம்மாவாசை திதியும் சேர்ந்து வரும் நாளில் தீபாவளி கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் கிருஷ்ணரை வணங்கி மகாலட்சுமி குபேர பூஜை செய்வது சிறந்தது எனவும் கூட கூறப்படுகிறது. ராமாயணத்தில் ராமர் ராவணனை அழித்துவிட்டு வனவாசம் முடிந்து சீதாதேவி மற்றும் லட்சுமணனுடன் அயோத்திக்கு திரும்பிய நாளை மக்கள் விளக்கேற்றி வரவேற்றனர் என்றும் அதன் தொடர்ச்சியே தீபாவளி பிறந்தது எனவும் கூறப்படுகிறது.
கங்கா ஸ்நானம் செய்யும் முறை;
தீபாவளி அன்று காலை 3 மணியிலிருந்து 4;30 மணிக்குள் தலையில் எண்ணெய் தேய்த்து சீயக்காய் தேய்த்து வெந்நீரில் குளிக்க வேண்டும். தீபாவளி அன்று இந்த கங்கா ஸ்நானம் மேற்கொண்டால் கங்கையில் குளித்த பலனை பெறலாம் என்பது ஐதீகம். தீபாவளி அன்று எண்ணெயில் லட்சுமி தேவியும் ,பிரம்ம முகூர்த்த நேரத்தில் சுடு தண்ணீரில் கங்கா தேவியும் வாசம் செய்வார்கள் என்றும் சீயக்காயில் வாயு பகவான் வாசம் செய்வதாகவும் சாஸ்திரங்கள் கூறுகின்றது.
அதனால் இந்த நேரத்தை பயன்படுத்தி குளித்துவிட்டு காலை சூரிய உதயத்திற்கு முன்பு அதாவது ஆறு மணிக்கு முன்பு பூஜைகளை செய்து முடித்து விட வேண்டும். இதுவே தீபாவளி கொண்டாடும் முறையாகும். மேலும் தீபாவளி அன்று வீட்டை சுத்தம் செய்தல் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நன்னாளில் லட்சுமி குபேர பூஜை செய்வது வீட்டில் செல்வ செழிப்பை ஏற்படுத்தும் என்பதும் நம்பிக்கையாகும்.
லட்சுமி குபேர பூஜை;
லட்சுமி குபேர பூஜையை அக்டோபர் 31ஆம் தேதி வியாழக்கிழமை 4; 30 லிருந்து 6 மணிக்குள் செய்து கொள்ளலாம். அன்றைய தினம் குபேரருக்கு சில்லறைகளை கொண்டு அர்ச்சனை செய்வது மிக சிறப்பாக கூறப்படுகிறது. அந்த நாணயங்களை மீண்டும் உங்கள் பணப்பெட்டியில் வைத்து வந்தால் பணவரவு அமோகமாக இருக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது. எனவே தீபாவளி அன்று கங்கா ஸ்நானம் செய்து வழிபாடுகளை முடித்து மாலை லட்சுமி குபேர பூஜை செய்து வந்தால் தீப ஒளியை போல் உங்கள் வாழ்வும் பிரகாசிக்கும் .