சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்துள்ளீர்களா ? அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்..
கலியுக வரதனாக கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விளங்க கூடியவர் தான் சுவாமி ஐயப்பன் .கார்த்திகை மாதம் சபரிமலை ஐயப்பனுக்கு மிகவும் விசேஷமான மாதமாக விளங்குகின்றது.
சென்னை –சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில் அறியலாம் .
கார்த்திகை மைந்தன் ஐயப்பன் ;
கார்த்திகை மாதம் என்றாலே சிவபெருமானின் தீபத்திருநாள் , முருகப்பெருமானின் கந்த சஷ்டி விரதம் என பல வழிபாடுகள் இருந்தாலும் கார்த்திகை மாதத்தின் முதல் நாளே ‘பள்ளிக்கட்டு சபரிமலைக்கு’ என எங்கும் ஒலிக்கும் பாடலை கேட்கலாம்.கலியுக வரதனாக கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விளங்க கூடியவர் தான் சுவாமி ஐயப்பன் .கார்த்திகை மாதம் சபரிமலை ஐயப்பனுக்கு மிகவும் விசேஷமான மாதமாக விளங்குகின்றது.
ஆண்டுதோறும் இருமுடி கட்டி ஐயப்பனை காண சபரிமலை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. ஐயப்பனுக்கு விரதம் மேற்கொள்ளும் முறைகள் மிகவும் கடுமையான விரதமுறையாக கூறப்படுகிறது. உண்மையில் விரதம் இருப்பது உண்ணாமல் இருப்பது கிடையாது 24 மணி நேரமும் ஐயப்பனை எண்ணி மனதார வழிபடுவதே ஆகும்.
மகிஷாசுரனை வதம் செய்த பராசக்தி மீது மகிஷா சூரனின் தங்கை மகிஷா கோபமுற்று பிரம்மாவை நோக்கி தவம் புரிகிறார். அப்போது பல வரங்களை பெற்ற அவர், தேவர்களையும் மகரிஷிகளையும் துன்புறுத்துகிறார். இதனால் திருமால் ஜெகன் மோகினி அவதாரமும், சிவபெருமான் பிச்சாடனாராகவும் அவதரித்தனர். அவர்களின் இருவரின் ஜோதியும் ஒன்று சேரும்போது ஜோதி ரூபமாக வெளிப்பட்டவர் தான் ஆனந்த மயமான ஐயப்பன். ஹரிக்கும் ஹரனுக்கும் பிறந்து பிரம்மச்சாரியத்தை கடைபிடிக்கும் இந்த தெய்வம் யோகப்பட்ட அணிந்து சின் முத்ரா ரூபராக கட்சி தருகிறார்.
விரதம் மேற்கொள்ளும் முறை;
ஐயப்ப வழிபாடு ஆரம்ப காலத்தில் 60 நாட்கள் கடைபிடிக்கப்பட்டது. பிறகு ஒரு மண்டலமாக அதாவது 48 நாட்களாக மேற்கொள்ளப்பட்டது. தற்போது இந்த விரத முறை அவரவர் சௌகரியங்களுக்கு ஏற்றவாறும் கடைபிடிக்க படுகிறது. ஆனால் 48 நாட்கள் விரதம் மேற்கொள்வதே சால சிறந்ததாக கூறப்படுகிறது. ஆரம்ப காலகட்டத்தில் ஐயப்பன் வழிபாடு கேரள மக்கள் மட்டுமே அறிந்த வழிபாடாக இருந்தது .தமிழகத்தில் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை என்பவரால் ஸ்ரீ ஐயப்பன் என்ற நாடகத்தின் மூலம் தமிழகம் முழுவதும் அறிமுகப்படுத்தினார்.
ஐயப்பனை நினைத்து முதல்முறையாக மாலை போடும்போது முதல் மாலையாக துளசி மாலையை அணிவது சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. 108 துளசி மாலை கொண்ட மாலையாகவோ அல்லது 54 ருத்ராட்சம் மணி கொண்ட மாலையாகவோ இருக்கலாம். இதில் ஐயனின் திரு உருவப்படம் போட்டு ஐயப்பனின் சன்னதியில் குருசாமி கைகளால் மாலை அணிந்து கொள்ள வேண்டும் அல்லது ஐயப்பனின் பாதத்தில் வைத்து அவரவரே அணிந்து கொள்ளலாம். மாலை அணிவது, இருமுடி கட்டுதல், நெய் அபிஷேகம் ஆகிய மூன்றும் சபரிமலை யாத்திரையில் பயன்படுத்தப்படும் முக்கிய படிகள் ஆகும்.
மாலை அணிந்த நாள் முதல் 18 படி ஏறி ஐயனுக்கு நெய் அபிஷேகம் செய்யும் வரை ஐயப்பன் மாலை அணிவித்தவரின் கூடவே பயணிப்பதாக ஐதீகம் உள்ளது.முதலில் மாலை அணியும் பொழுது கருப்பு உடை அணிய வேண்டும் . மற்ற ஆண்டுகள் காவி உடை அணிந்து கொள்ளலாம் .கன்னி சாமியாக இருந்தால் கட்டாயம் கருப்பு உடை தான் அணிய வேண்டும். முடிந்தவரை காலணிகளை பயன்படுத்தாமல் இருப்பது சிறந்தது.
அதிகாலை எழுந்து குளிர்ந்த நீரில் குளித்து ஐயப்பனுக்கு நெய்வேத்தியம் வைத்து பூஜை செய்து பிறகு தான் உணவு அருந்த வேண்டும். உணவு முறை அவரவர் உடல் நிலைக்கேற்ப எடுத்துக் கொள்ளலாம். குறிப்பாக அது சைவ உணவாக மட்டுமே இருக்க வேண்டும்.
மாலை அணிந்தவர்கள் ஐயப்ப வழிபாட்டை செய்து ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குவது சிறந்ததாக கூறப்படுகிறது .அதனால் தான் ஐயப்பனை அன்னதான பிரபு என்று கூறுகின்றனர்.
மாலை அணிந்தவர் செய்யக்கூடாதவைகள்;
கோபம், சண்டை, பகை ,பழிதீர்த்தல் இதுபோல் தீய செயல்களில் ஈடுபடாமலும் மது குடித்தல், புகை பிடித்தல், முடி வெட்டுதல், தாடி சேவ் பண்ணுதல் போன்றவற்றையும் செய்யக்கூடாது. பாய், தலையணை ,மெத்தை போன்றவற்றை தவிர்த்து வெறும் தரையில் ஏதேனும் துணி விரித்து அதில் உறங்கலாம் . மேலும் பேச்சை குறைத்து மௌனத்தை கடைப்பிடிப்பதே சிறந்தது. முதலில் உங்கள் பேச்சை துவங்கும் போது சுவாமி சரணம் என கூறி ஆரம்பிக்க வேண்டும். இந்த நாமத்தை அடிக்கடி உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும். இதுவே சபரிமலை ஐயப்ப வழிபாட்டின் விதிமுறைகளாக கூறப்படுகிறது.
சாஸ்தா என அழைக்கப்படும் காவல் தெய்வங்களின் தர்ம சாஸ்தாவில் இருந்து தோன்றி ஆனந்த ஐயப்பனாக காட்சி தரக்கூடியவர் தான் ஹரிஹரசுதன் .ஆதி மகா சாஸ்தா, தர்ம சாஸ்தா, ஞான சாஸ்தா, கல்யாண வரத சாஸ்தா என எட்டு வடிவங்களை கொண்டுள்ளார். மேலும் முருகப்பெருமானுக்கு அறுபடை வீடுகள் இருப்பதைப் போல் ஐயப்பனுக்கும் அறுபடை வீடுகள் இருப்பதாக கூறப்படுகிறது. பக்தர்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றித் தரும் அருள் தெய்வமாகவும் நெய் அபிஷேகத்தை ஏற்று பக்தர்களின் பிரச்சனைகளை தீர்க்கக்கூடிய ஆனந்தமயமான தெய்வமாகவும் ஐயப்பன் விளங்குகின்றார்.