தங்கைக்கு தட்டுகளில் சீர்வரிசை அனுப்பிய ரெங்கநாதர் ..! கொள்ளிட ஆற்றில் கோலாகலம்..!!
சமயபுரம் மாரியம்மன் ஸ்ரீரங்கம் ரெங்கநாதரின் தங்கை என்ற பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
இதனிடையே சமயபுரம் மாரியம்மன் கோவில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதரின் சார்பு கோவிலாக இருந்து உள்ளது.மேலும் ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று தீர்த்தவாரிக்கு கொள்ளிடம் ஆற்றுக்கு தங்கையும் சமயபுரத்தின் நாயகியுமாக ஒய்யார நடைபோட்டு வரும் மாரியம்மனுக்கு அண்ணனும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதருமானவர் தன் கோவிலில் இருந்து பட்டுப்புடவை மற்றும் வளையல்கள், மாலைகள், சந்தனம், மஞ்சள், பழ வகைகள், தாம்பூலம் உள்ளிட்ட மங்களப்பொருட்கள் அடங்கிய சீர்வரிசையை வழங்கி வருவது வழக்கம்.இதன் படி நேற்று காலை சமயபுரம் கோவிலில் இருந்து உற்சவர் மாரியம்மன் கண்ணாடி பல்லக்கில் புறப்பட்டு வழிநடையாக உபயங்கள் கண்டருளி நொச்சியம் வழியாக ஸ்ரீரங்கத்தின் வடக்குவாசல் கொள்ளிடக்கரையை தாய் வந்து சேர்ந்தார்.
அம்மாவுக்காக அமைக்கப்பட்டிருந்த அலங்கார பந்தலில் எழுந்தருளி தாய் தீர்த்தவாரியை கண்டருளினார். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் தன்னை காண வந்த பக்தர்களுக்கு அருள்பாலித்து காட்சியளித்தார்.
அண்ணனான ரெங்கநாதர் ஸ்ரீ ரங்கம் கோவில் கருட மண்டபத்தில் இருந்து பட்டுப்புடவை, வளையல்கள் மற்றும் மாலைகள், சந்தனம் மற்றும் மஞ்சள், பழ வகைகள் மற்றும் தாம்பூலம் உள்ளிட்ட மங்களப்பொருட்கள் அடங்கிய தட்டுகளை அர்ச்சகர்கள், ஸ்தலத்தார்கள், அறங்காவலர்கள், அதிகாரிகள் தங்களது தலையில் சுமந்தும் தங்களது கையில் ஏந்தியும் மங்கள இசை வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக புறப்பட்டு வடக்கு வாசல் வழியாக சென்று கொள்ளிடம் ஆற்றில் தாய் எழுந்தருளியிருந்த பந்தலுக்கு வருகை வந்தனர்.
இசை வாத்தியங்கள் முழங்க சீர்வரிசை கொண்டு வந்த பொருட்களை சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் குமரதுரை உடன் கோவில் அலுவலர்களிடம் ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன் அவருடன் உடன் இருந்த அதிகாரிகள் வழங்கினர்.
இதை அடுத்து அம்மனுக்கு அண்ணன் ரெங்கநாதர் அனுப்பிய கோவில் பட்டு வஸ்திரம், மாலைகள் உள்ளிட்டவை தங்கையான தாய்க்கு அணிவிக்கப்பட்டு மங்களப்பொருட்களுடன் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் மாரியம்மனை கரகோஷங்கலுடன் வணங்கினர்.