பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் கொடியேற்றம்..! வெகுசிறப்பாக நடைபெற்றது..!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலாக திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் இருந்து வருகிறது.
இக்கோவிலில் மாசித்திருவிழா கடந்த மாதம் 31 தேதி பூத்தமலர் பூ அலங்காரத்துடன் தொடங்கிய நிலையில் மறுநாள் 1 தேதி அன்று பூச்சொரிதல் விழாவும், 3 தேதி சாட்டுதலும் நடந்த நிலையில் இதனைத்தொடர்ந்து மாசித்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம் நேற்று வெகுச் சிறப்பாக நடைபெற்றது.
மேலும் திண்டுக்கல் விஸ்வகர்ம மகாஜன சபா சார்பில் தாயாருக்கு மஞ்சள் புடவை மற்றும் திருமாங்கல்யம் சாத்துபடி செய்த பின்னர் தான் கொடியேற்றம் நடைபெறுவது வழக்கம்.
இதனால் திண்டுக்கல் விஸ்வகர்ம மகாஜன சபா தலைவர் ஏ.கந்தசாமி அவர்களின் தலைமையில் சபா மண்டபத்தில் இருந்து தாயாருக்கு சாத்துபடி செய்யப்படுகின்ற மஞ்சள் புடவை மற்றும் திருமாங்கல்யம் ஆகியவை மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ரதவீதிகளின் வழியே வலம் வந்து பின் கோவிலை அடைந்தது. அதன்பிறகு தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மஞ்சள் புடவை சாத்துபடி திருமாங்கல்யம் சாத்துபடி செய்தல் நடந்தது.
அதே போல திண்டுக்கல் மாவட்டம் டவுண் மார்க்கெட் குமரன் தெரு சாம்பன் குலத்தார் சார்பில் பாலக்கொம்பு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ரதவீதிகளின் வழியே சுற்றி வந்து அதன் பின் கோவிலை அடைந்தது.இதன்பிறகு பாலக்கொம்பு ஆனது ஊன்றப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்று பாலகொம்புக்கு மஞ்சள் நீர் ஊற்றினர்.
இதன் பின்னர் மஞ்சள் வண்ண துணியில் சிங்க வாகனத்தில் கோட்டை மாரியம்மன் அமர்ந்து இருப்பதை போல வரையப்பட்ட கொடி தயார் நிலையில் இருந்தது. இந்நிலையில் கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் கொடியில் உள்ள அம்மன் படத்துக்கு கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.இதன்பிறகு சரியாக பகல் 12 மணியளவில் கோவில் கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்ட போது சுற்றி இருந்த பெண்கள் அனைவரும் பக்தி பரவசத்தில் ஓம் சக்தி, பராசக்தி என கோஷங்களை எழுப்பினர்.